இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் புகைப்படம் வெளியீடு

By செய்திப்பிரிவு

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகள் யார் யார் என இலங்கை அரசு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று  இலங்கையில் கிருத்துவ தேவாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. அங்குள்ள என்.டி.ஜே அமைப்புக்கும் இதில் தொடர்புள்ளதாக இலங்கை அரசு அந்த அமைப்பையும் தடை செய்தது.

குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை, தொடர் விசாரணை என நூற்றுக்கணக்கானோரை பிடித்து இலங்கை புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இண்டர்போல் உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணையில் குதித்துள்ளன.

இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலியாக இந்தியாவிலும் உளவுத்துறை, ரா, என்.ஐ.ஏ அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இலங்கைக்கு அருகே உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் என்.ஐ.ஏ முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது.

குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கு தலைவனாக செயல்பட்டது ஜக்ரான் பின் ஹாசிம் என்ற தீவிரவாதி என்பது தெரியவந்தது. ஜக்ரான் பின் ஹாசிமும் இந்த தாக்குதலில் பலியானான். 

சில தீவிரவாதிகள் தப்பிவிட்டதாக இலங்கை அரசின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் புகைப்படங்களை வெளியிட்டு தேடிவருகின்றனர். இந்நிலையில் எங்கெல்லாம் குண்டு வெடித்தது, யார், யார் அங்கு குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்தனர் என்கிற பட்டியலை புகைப்படத்துடன் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த விபரம் வருமாறு:

1. சங்ரில்லா ஹோட்டல் - மொஹம்மத் காஸீம் மொஹம்மத் ஸஹ்ரான்

2. சங்ரில்லா ஹோட்டல் - மொஹம்மத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத்

3. சினமன் கிரேன்ட் ஹோட்டல் - மொஹம்மத் இப்ராஹிம் இன்ஸாப் அஹமத்

4. கிங்ஸ் பெரி ஹோட்டல் ;- மொஹம்மத் அஸாம் மொஹம்மத் முபாரக்

5. புனித செபஸ்டியன் தேவாலயம் கட்டுவாப்பிடிய நீர்கொமும்பு - ஹச்சி மொஹம்மத் மொஹம்மத ஹஸ்துன்

6. புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிகடை - அலாவுதீன் அஹமத் முவாத்

7. சீயோன் தேவலயம் மட்டக்களப்பு  ;-  மொஹம்மத் நஸார் மொஹம்மத் அஸாத்

8. தெஹிவளை - அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மத்

9. தெமட்டகொடை - பாத்திமா இன்ஹாம்

மேற்கண்ட 9 இடங்களின் பட்டியலை புகைப்படத்துடன் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. தற்போது குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் உள்ள சிலருடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE