தொலைக்காட்சித் தொடரில் நடித்தது வாழ்க்கையிலும்  உண்மையானது: நாட்டின் அதிபராகப் பதவியேற்ற காமெடி நடிகர்

By செய்திப்பிரிவு

உக்ரன் நாட்டின் அதிபராக தொலைக்காட்சி காமெடியன் விளாதிமிர் செலென்ஸ்கி திங்களன்று பதவியேற்றார். கடந்த மாதம் நடந்த தேர்தலில் பலரும் ஆச்சரியப்படுமாறு இவர் வெற்றி பெற்றதையடுத்து இன்று அதிபராகவே பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

கீவில் உள்ள உக்ரேனிய நாடாளுமன்றத்தில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில் செலென்ஸ்கி நாட்டின் அதிபராகப் பதவியேற்றார்.

 

தொலைக்காட்சி காமெடி நடிகரான செலென்ஸ்கியிற்கு அரசியல் அனுபவம் சுத்தமாகக் கிடையாது. வழக்கமான அரசியல், கிளிஷே அரசியலிலிருந்து விடுபட உக்ரைன் மக்கள் காமெடியனை பெரிய அளவில் வெற்றி பெறச் செய்து பெட்ரோ பொரொஷென்க்கோவை வீட்டுக்கு அனுப்பினர்.

 

இவர் சட்டம் படித்தவர், க்வர்த்தால் 95 என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி திரைப்படங்கள், கார்ட்டூன்கள், டிவி காமெடி ஷோக்களை தயாரித்து வந்தார். அப்போதுதான் ‘மக்கள் சேவகன்’ அதாவது ‘செர்வண்ட் ஆஃப் த பீப்பிள்’ என்ற தொலைக்காட்சி தொடரை எடுத்தார். அதில் உக்ரைன் அதிபராகவே நடித்தார் இப்போதைய அதிபர் செலென்ஸ்கி. 2015 முதல் 2019 வரை இந்த அரசியல் தொடர் ஒளிபரப்பானது. 

 

இந்தத் தொடர் பிரபலமடைந்ததையடுத்து பெயருக்கு ஒரு அரசியல் கட்சியை அவரின் நிறுவன பணியாளர்களே தொடங்கினர். டிசம்பர் 31, 2-18-ல் அதிபராகப் போட்டியிடப்போவதாக செலென்ஸ்கி அறிவித்தார். இவர் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த 6 மாதங்களுக்கு முன்னரே கருத்துக் கணிப்பில் செலென்ஸ்கி அதிபராக அமோக ஆதரவு இருந்தது.

 

தேர்தலில் செலென்ஸ்கி 73.22% வாக்குகளைப் பெற்று முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோவை அதிர்ச்சித் தோல்விக்குள்ளாக்கினார்.

 

மார்ச் 2019-ல் இவர் அளித்த பேட்டியில் ’அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை பிறக்க வேண்டும்.தொழில்பூர்வமான, நாகரீகமானவர்கள் பதவிக்கு வர வேண்டும்’ என்பதற்காகவே அரசியல் களம் கண்டதாக தெரிவித்திருந்தார்.  3-4 மாதங்களில் ஒரு நாட்டின் அதிபரான காமெடி நடிகர் என்ற அபாரச் சாதனையை நிகழ்த்தினார் தற்போதைய அதிபர் செலென்ஸ்கி.

 

அதிபராவதற்கு முன்பாக இவரும் மைய நீரோட்ட பத்திரிகையாளர்களையும் பத்திரிகைகளையும் புறக்கணித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த்து, ஆனால் அவற்றையெல்லாம் இவர் சட்டை செய்யாமல் ஒரு கையால் புறந்தள்ளினார். இவர் அதிபராக வெற்றி பெற்றவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் செலென்ஸ்கியிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

உக்ரைன் ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோவிலும் இணைய வேண்டும் என்று கூறிவந்த செலென்ஸ்கி, ஜனநாயகத்தை மதிக்கும் விதமாக, மக்கள் கருத்துக் கணிப்பில் இவற்றுக்கு ஆதரவு இருந்தால்தான் முடிவெடுக்கப்படும் என்றார்.

 

ஆனால் இவருக்கு எதிர்ப்பும் இல்லாமலில்லை. பத்திரிகை ஒன்றில் அலெக்சாண்டர் ஜே.மோட்டில் என்ற விமர்சகர் செலென்ஸ்கியை, “அபாயகரமான ரஷ்ய ஆதரவாளர், டிவி தொடரை வைத்து உக்ரைன் மொழியையும் தேசத்தையும் இவர் காலி செய்து விடுவார்” என்று எழுதினார், ஆனால் இவையெல்லாம் மக்களிடம் எடுபடவில்லை.

 

உக்ரைன் அதிபரான காமெடி டிவி நடிகர் செலென்ஸ்கியிற்கு வயது 41 என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE