”எனது தங்கை எந்தத் தவறும் செய்யவில்லை. அவள் அப்பாவி. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்” ஏமனின் தலைநகர் சனாவில் பள்ளி ஒன்றில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமியின் சகோதரி கூறிய வார்த்தைகள் இவை.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேலாக ஷியா-சன்னி பிரிவுகளுக்கு இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா (சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு) ஆதரவாகச் செயல்படுகிறது. ஹவுத்தி (ஷியா பிரிவினர்) கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
இதுவரை உள்நாட்டுப் போர் காரணமாக 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். 80 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வறுமையின் கொடிய பசியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இவர்களில் 50 லட்சம் பேர் குழந்தைகள்.
20 லட்சத்துக்கு அதிகமான மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர்.
கடந்த 2018 -ம் ஆண்டில் ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போர் காரணமாக 4,800 பொது மக்கள் இறந்திருக்கிறார்கள் என்றும் அதில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் 100 பேர் உயிரிழந்தனர் என்றும் ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்தது. அரசு - கிளர்ச்சியாளர்கள் இரண்டு தரப்பிலும் போர்க் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
இதன் காரணமாக உலகிலேயே ஏமன் மனிதாபிமான நெருக்கடி அதிகமுள்ள நாடாக இருக்கிறது.
தினம் தினம் வான்வழித் தாக்குதலை நடத்தும் சவுதி - கூட்டுப் படைகளை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்தும் அவை தொடர்ந்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை ஏமன் அரசுப் படைக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதில் தொடர் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் சமீபத்தில் ஏமனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக தெரிவித்தது.
பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மசூதிகள், சந்தைகள் என எந்தப் பரிவும் இல்லாமல் சவுதி கூட்டுப் படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதில் கடந்த 9-ம் தேதி ஏமன் தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். பல குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இன்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த குழந்தைகளின் உடல்களை அப்பள்ளியில் பயின்ற குழந்தைகள் சுமந்து சென்ற புகைப்படங்கள் உலக நாடுகளின் மவுனத்தை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் இது குறித்து சவுதி தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
வழக்கம்போல் நாங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தினோம் என்று சவுதி கூறவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் கடந்த கால வரலாறுகளும் அவ்வாறுதான் உள்ளன.
அதுமட்டுமில்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அனுப்பி வைக்கப்படும் உணவு, மருந்துகள் செல்லும் கடல் வழிப் பாதையையும் சவுதி தடுத்து வைத்திருக்கிறது.
ரத்தான அமைதிப் பேச்சுவார்த்தை
கடந்த செப்டம்பர் மாதம் ஏமன் அரசுக்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நாசம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கூறி ஏமன் அரசுக் குழு இந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியது.
உலக நாடுகளின் எதிர்ப்புக்கு உள்ளாக்கப்படுமா சவுதி?
பட்டினியாலும், வான்வழித் தாக்குதலும் ஏமனில் இளம் தலைமுறைகள் பலியாகிக் கொண்டு வருவதையும் இனியும் கண்டு காணாமல் இல்லாமால் உலக நாடுகள் சவுதிக்கு எதிரான வலுவான குரலைக் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு குழந்தைகள் தன்னார்வ நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன.
சிரியாவைப் போன்ற கவனம் ஏமனுக்குக் கிடைக்குமா..? பொறுத்திருந்து பார்ப்போம்...
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago