அமெரிக்காவின் சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. டொனால்டு ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் தங்கப் புதையல் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். 2020-ம் ஆண்டிலும் ட்ரம்ப் அதிபராகி விடுவார் என்ற குஷியில் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் பிரச்சார அதிகாரிகளுக்கும் ரஷியர்களுக்கும் இடையில் எந்தக் கூட்டும் இல்லை என அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், தனது 4 பக்க அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன் மூலம் விசாரணை அறிக்கை வெளியாவதைத் தடுக்க அதிபர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தெளிவாகி விட்டது.
ஆனால், முல்லரின் அறிக்கை முழுமையற்ற தீர்ப்பாக இருக்கிறது. வெள்ளை மாளிகையில் கொண்டாட்டம் நடக்கும் இந்த நேரத்தில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது இந்த அறிக்கை. `இந்த அறிக்கை அதிபர் ட்ரம்ப் குற்றச்செயலில் ஈடுபட்டார் எனச் சொல்லவில்லை.. அதேநேரம் அவர் அப்படி செய்யவில்லை என்றும் சொல்லவில்லை..’ எனக் கூறியிருக்கிறார் அட்டர்னி ஜெனரல் பார்.
2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என முல்லர் கூறியிருந்தார். ஆனால் ட்ரம்பின் பிரச்சார அதிகாரிகள் யாரும் நேரடியாக இந்த விஷயத்தில் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்ளவில்லை. எப்பிஐ இயக்குநராக இருந்த ஜேம்ஸ் காமேயை நீக்கியதன் மூலம் நீதி வெளியாவதைத் தடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டும், சிறப்பு விசாரணை அதிகாரி நியமனம் மூலம் சரி செய்யப்பட்டு விட்டதாக பலர் சமாதானம் ஆகி விட்டனர். ஆனால், `ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான அட்டர்னி ஜெனரல் பார் வெளியிட்ட 4 பக்க அறிக்கை வேண்டாம்...முல்லரின் முழு அறிக்கையையும் வெளியிட வேண்டும். ட்ரம்ப் நல்லவரா இல்லையா என அதைப் பார்த்து நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம்..’ என ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிபர் ட்ரம்பைக் காப்பாற்ற, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்காமல் புறந்தள்ளுவதோடு, என்ன வேண்டுமானாலும் செய்வார் அட்டர்னி ஜெனரல் பார் என்ற விவாதம் அமெரிக்காவில் சூடுபிடித்துள்ளது. ஆனால், ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் முல்லரின் முழு அறிக்கையையும் அட்டர்னி ஜெனரல் வெளியிடுவார் என ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் நடக்காது என்றும் அதை எப்போது வெளியிடுவார், அப்படியே வெளியிட்டாலும் அ்து முழுமையாக இருக்குமா என பலவிதமான சந்தேகங்களையும் பலர் கிளப்பியிருக்கிறார்கள். வலதுசாரிகளும் வெள்ளை மாளிகையும் கொண்டாட்டங்களை எல்லாம் முடித்து களைப்படையும்வரை பொறுமையாக நீதித் துறை காத்திருக்கும். ஆனால், எதிர்க் கட்சிகள் முல்லரின் அறிக்கையைப் பெறும் வகையில் சம்மன் அனுப்பக் கூடும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
அட்டர்னி ஜெனரலின் அறிக்கை, முல்லரின் அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டதா அல்லது அரசியல் சட்டப் பிரிவு 2-ன்படி, அதிபருக்கு இருக்கும் அதிகாரம் குறித்த அட்டர்னி ஜெனரலின் சொந்த கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டதா என்ற சந்தேகத்தையும் பலர் கிளப்புகின்றனர். `அதிபர் என்பவர் அனைத்து சட்ட திட்டங்களுக்கும் மேலானவர் என நம்புவதோடு அதை விளக்கி 19 பக்க அறிக்கை வெளியிட்டதாலேயே அட்டர்னி ஜெனரல் பதவியைப் பெற்றவர் பார். முல்லரின் அறிக்கையை அப்படியே வெளியிடாமல், அதன் மேல் தனது தீர்ப்பை மட்டும் வெளியிட்டவரை எப்படி நம்ப முடியும்..’ என பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசி கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், ட்ரம்ப் மற்றும் பில் கிளிண்டன் குறித்த விசாரணை அதிகாரிகளின் அறிக்கைகளை ஒப்பிட்டு, மக்களிடையே பேச்சு எழுந்துள்ளது. அப்போது இருந்த அட்டர்னி ஜெனரல் ஜேனட் ரெனோ, விசாரணை அதிகாரி கென்னத் ஸ்டாரின் அறிக்கையை வாங்கி வைத்துக் கொண்டு, மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில் பில் கிளிண்டன் அப்பழுக்கற்றவர் என 4 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என பேச்சு எழுந்துள்ளது. ஆனால், 1998-ல் கென்னத் ஸ்டார் தனது அறிக்கையை நேரடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததால் - அப்போது அதுதான் வழக்கம் - அதை பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இணையத்தில் வெளியிட வேண்டும் என நாடாளுமன்றம் முடிவு செய்தது. ஆனால், 1999 முதல் விசாரணை அதிகாரிகளின் இதுபோன்ற அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்குப் பதிலாக, நீதித்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என சட்டம் மாற்றப்பட்டது. அதனால்தான் முல்லர் தனது அறிக்கையை நீதித்துறையிடம் தாக்கல் செய்தார்.
2020 அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு சாதகமான தீர்ப்புதான் இது என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2 ஆண்டுகளாக முல்லர் விசாரணையை குறை கூறி வந்தார் ட்ரம்ப். தனது புகழைக் கெடுக்க எதிர்க் கட்சிகளும் மீடியாக்களும் சதி செய்வதாக புகார் கூறினார் ட்ரம்ப். இப்போது அறிக்கை வந்ததும் தான் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுபட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார். முல்லர் அறிக்கை முழுவதும் வெளியானால், கண்டிப்பாக ட்ரம்ப் சிக்குவார் என ஜனநாயகக் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால், சிஎன்என் நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 60 சதவீதம் பேர், ட்ரம்ப் தப்பு செய்திருக்க மாட்டார் என்று தான் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.
வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்
தமிழில்: எஸ்.ரவீந்திரன்
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago