ஜெஃப்ரே டாமர்...அமெரிக்காவால் மறக்க முடியாத பெயர்

By இந்து குணசேகர்

”ஜெஃப்ரே மிகவும் அழகானவர்...ஆனால் அவர் மனம் நோய்வாய்ப்பட்டிருந்தது” ஜெஃப்ரே இறந்தபோது அமெரிக்காவில் பரவலாகப் பேசப்பட்ட வார்த்தைகள் இவை.

ஜெஃப்ரே டாமர் 90களின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர். இன்றுவரை ஜெஃப்ரே ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து அமெரிக்க மக்களில் சிலர் விடுபடாமல் உள்ளனர் என்பதற்கு இன்றைய சமூக வலைதள பதிவுகளையே உதாரணமாகக் கூறலாம்.

ஜெஃப்ரே டாமரின் தோற்றத்தைப் பற்றியும், அவரைப் பற்றிய சுவாரஸ்ய கதைகளை பற்றி குறைந்தபடசம் 500 பதிவுகளையாவது ஓவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது. ஒருவகையில் ஜெஃப்ரே மீதான மக்களின் இந்த ஈர்ப்பு ஒருவித அச்சம் உணர்வைதான் நமக்கு தருகிறது.

சமீபத்தில் கூட பிரபல பாப் பாடகியான அரியானா கிராண்டே ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில், தன்னைப் பெரிதும் பாதித்தவர்கள் பட்டியலில் ஜெஃப்ரே டாமரின் பெயரைக் கூறியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு பிரபலங்களாலும், சாமானிய மக்களாலும்... அரசியல் நையாண்டிகள், உணவு குறித்த நகைச்சுவைகள், கவர்ச்சி, உளவியல் தொடர்பான பிரச்சினைகள் என அனைத்து மேற்கோள்களுக்கும் அமெரிக்க மக்களால் ஜெஃப்ரே டாமர் எடுத்துக் கொள்ளப்படுகிறார்.

சரி யார் அந்த ஜெஃப்ரே டாமர்? நடிகரா? பாப் பாடகரா? அரசியல்வாதியா? இல்லை... ஜெஃப்ரே டாமர் ஒரு சீரியல் கொலைகாரன். தொடர்ந்து 17 கொலைகளை செய்தவன். பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்தது மட்டுமல்லாமல் கொல்லப்பட்டவர்களின் உடல் பாகங்களைச் சேகரித்து அதனை உணவாகவும் எடுத்துக் கொண்ட கொலைகாரன். யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூர குற்றங்களைச் செய்தவன்

ஜெஃப்ரே கைது செய்யப்பட்டபோது எழுந்த வெறுப்புணர்வு அவரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் இன்றளவும் மிகத் தீவிரமாக இருக்கிறது.

மில்வாக்கி கேனபில்: அமெரிக்க ஊடகங்களால் ”மில்வாக்கி கேனபில்” ( மில்வாக்கி என்பது அமெரிக்காவிலுள்ள நகரம். அங்குதான் ஜெஃப்ரே வசித்து வந்தார். கேனபில் என்பது மனிதர்களைச் சாப்பிடுவர் என்று பொருள்) என்று அழைக்கப்படும் ஜெஃப்ரே 1960 ஆம் ஆண்டு மில்வாக்கியில் பிறந்தவர்.

ஜெஃப்ரேவுக்கு ஒரு தம்பி இருக்கிறார். வசதியான குடும்பத்தில் பிறந்த ஜெஃப்ரே தனது சிறுவயதில் எல்லா சிறுவர்களையும் போல ஆரோக்கியமான சூழ்நிலையில்தான் வளர்ந்திருக்கிறார்.

ஜெப்ஃரேவின் பெற்றோர்கள் பிரிந்த நிலையில் பதின் பருவத்திலிருந்து அவரது நடவடிக்கைகள் வேறுபட்டுள்ளன. தான் ஒரு தன்பாலின உறவாளர் என்பதை உணர்ந்திருக்கிறார். அதில் ஏற்பட்ட குழப்பம் அவரை குடிப்பழக்கம் மற்றும் கொலைகளை நோக்கித் தள்ளியுள்ளது.

வேதியியல் ஆசிரியரான ஜெஃப்ரேவின் தந்தை லியோனல் டாமர், இறந்த மிருகங்களைப் பாட்டில்களில் அமிலங்களுடன் அடைத்து தனது வீட்டில் வைத்து ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தி இருக்கிறார். இந்த முறைதான் எதிர்காலத்தில் தனது கொலைகளுக்கு ஜெஃப்ரே பயன்படுத்தி இருக்கிறார்.

ஜெஃப்ரேவின் கடைசி கொலை முயற்சியிலிருந்து தப்பிய எட்வர்ட்ஸ் போலீஸாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில்தான் ஜெஃப்ரே 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து விசாரணை நடந்தது. ஜெஃப்ரே தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் தனக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், நீதிமன்றம் ஜெஃப்ரேவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

அமெரிக்கா டெட் பண்டி, ரிச்சர்ட் ரம்ரிஸ் போன்ற பல சீரியல் கொலைகாரர்களைக் கடந்திருக்கிறது. ஆனால் ஜெஃப்ரே மட்டும் இன்னும் தீவிரமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு முக்கியக் காரணம் ஜெஃப்ரே தனது கொலைகளுக்கும் மற்ற கொலைகாரர்களைப் போல் சமூகத்தையோ, தனது பெற்றோர்களையோ குற்றம் சுமத்தவில்லை. தனது தவறுக்கு தான் மட்டுமே காரணம் என்று ஏற்றுக்கொண்டார்.

கைதுக்குக் பிறகு ஜெஃப்ரே அளித்த ஒரு நேர்காணல் பல லட்சம் பார்வையாளர்களால் இன்றும் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் மிகப் பக்குவமாக, அமைதியாக அனைத்து கேள்விகளுக்கும் ஜெஃப்ரே பதில் கூறுகிறார். எந்தவித பதற்றமும் இல்லாமல் ஜெஃப்ரே பேசும் அந்த நேர்காணல் மிகப் பிரபலமானது.

அதில் ஜெஃப்ரே, "நான் எனது கற்பனை உலகத்தை எனது நிஜ வாழ்க்கையை விட சக்தி வாய்ந்ததாக மாற்ற எண்ணினேன். நான் மனிதர்களை ஒரு பொருளாகப் பார்க்கப் பழகினேன். நான் ஒரு நோய் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்தேன்.

சாதாரண மக்களிடம் இருக்கும் உணர்வுகள் எனக்கு இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் கடைசியாக எப்போது அழுதேன் என்பதையே மறந்துவிட்டேன். இதில் என் பெற்றோர்களைக் குறைகூறுவது எனக்கு கோபத்தைத்தான் தருகிறது. நான் நோய் பிடித்தவன். நான் சிறையில் இருப்பதுதான் பிறருக்கு நல்லது” என்று கூறினார்.

ஜெஃப்ரே டாமர் குறித்து அவரிடம் விசாரணை நடத்திய பாட் கென்னடி நேர்காணல் ஒன்றில் கூறும்போது, "ஜெஃப்ரே மற்ற சீரியல் கில்லர்களிலிருந்து மாறுபட்டவர். தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட ஒரே சீரியல் கில்லர் அவர்தான். அவர் எதையும் மறைக்கவில்லை.

நான் அவரிடம் தொடர்ந்து ஆறு வாரங்கள் விசாரணை நடத்தினேன். ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் அவருடன் செலவிட்டேன். அவருடன் சேர்ந்து உணவு உண்டேன். இதில் என்ன ஆச்சரியம் என்றால்... சிறையிலிருக்கும் அவருக்குப் பெண்களிடமிருந்து வந்த காதல் கடிதங்கள், அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம். சிரித்திருக்கிறோம்...

ஜெஃப்ரே உயர் வகுப்பிலிருந்து வந்த இளைஞர். அவர் அழகானவர். ஆங்கிலத்தில் நல்ல சொல்வளம் மிக்கவர். அவர் தனது குடும்பத்தின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவருக்கு சாதாரண மனிதர்களைப்போல் உணர்வுகள் உள்ளன. அவரது நீல நிறக் கண்களை உற்றுப்பார்த்தால் அதில் சாத்தான் இல்லை என்று நீங்கள் உணரலாம்.

நான் ஒருமுறை அவரிடம், ''ஜெஃப்ரே நீ ஏன் ஒரு காதலை நிரந்தரமாகத் தேடிக் கொள்ளவில்லை? ஏன் இத்தனை பேரை கொலை செய்தாய்?'' என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ’’அனைவரும் கடைசியில் உங்களை விட்டுச் சென்றுவிடுவார்கள் பாட்... அதனால்தான் நான் காதலித்தவர்கள் என்னுடம் கடைசிவரை இருக்க வேண்டும் என்று அவர்களைச் சாப்பிட்டேன்'' என்றார்.

என்னைப் பொறுத்தவரை ஜெஃப்ரே தனிமையினால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட அழகான புறத்தோற்றம் கொண்ட இளைஞர்” என்றார் பாட் கென்னடி .

ஜெஃப்ரே டாமரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஜெஃப் என்ற ஆவணப்படம் வெளியானது. மை பிரண்ட் டாமர் (2017), டாமர் (2002) ஆகிய படங்களும் பல புத்தகங்களும் வெளியாகியுள்ளன. அமெரிக்க உளவியல் ஆராய்ச்சியாளர்களின் புதிய புதிய ஆய்வுகளுக்கும் ஜெஃப்ரேவின் வாழ்க்கைதான் பெரும்பாலான நேரங்களில் முதல் தேர்வாக இருக்கிறது.

சிறையில் சக கைதியான கிறிஸ்டோபர் ஸ்கேவர் என்பவரால் ஜெஃப்ரே 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தனது 33-வது வயதில் கொல்லப்பட்டார்.

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

2 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

மேலும்