விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தமிழக ஐடி ஊழியருக்கு அமெரிக்காவில் 9 ஆண்டு சிறை

By செய்திப்பிரிவு

விமானத்தில் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது சக பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஐடி ஊழியருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபு ராமமூர்த்தி (வயது 35) அமெரிக்காவின் டெட்ரியாட் நகரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எச்-1பி விசா மூலம் 2015-ம் ஆண்டு அமெரிக்காவில்  வந்து தங்கியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி லாஸ்வேகாஸில் இருந்து டெட்ரியாட் நகருக்கு  விமானத்தில் சென்றுள்ளார். அந்த விமானத்தில் இரவு பயணத்தின்போது பயணிகள் அனைவரும் தூங்கியுள்ளனர். பிரபு ராமமூர்த்தி அமர்ந்து இருந்த இருக்கைக்கு அடுத்த இருக்கையில் இளம் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

நள்ளிரவு நேரத்தை நெருங்கும்போது பிரபு ராமமூர்த்தி அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் தூக்கத்தில் இருந்த அந்த பெண் எழுந்து பதறி எழுந்துள்ளார். உடனடியாக விமான ஊழியர்களை அவர் உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, பிரபு ராமமூர்த்தி சரியான முறையில் உடை அணியாமல் இருந்ததையும், அந்த பெண்ணின் இருக்கை பகுதியில் இருந்ததையும் உறுதி செய்தனர்.

இதையடுத்த விமானம் டெட்ரியாட்டில் தரையிறங்கியவுடன் பிரபு ராமமூர்த்தி மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீ்ர்பளித்த நீதிபதி பிரபு ராமமூர்த்தி தவறான முறையில் நடந்ததற்கு ஆதாரம் இருப்பதை உறுதி செய்தார். இதையடுத்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்காக அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE