2018-ம் ஆண்டு நிறைவு பெற இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ளன. கொண்டாட்டங்கள், போராட்டங்கள், விமர்சனங்கள், தேர்தல், ஆட்சி மாற்றம் இயற்கைப் பேரிடர் என பல்வேறு உணர்வூப்பூர்வ சம்பவங்கள் உலகம் முழுவதும் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டில் உலகில் நடந்த அனுபவங்களை 360 கோணத்தில் இந்தத் தொகுப்பில் காண இருக்கிறோம்.
சிறகு முளைத்த சவுதி பெண்கள்
சவுதி மன்னர் சல்மானும் இளவரசர் முகமது பின் சல்மானும் பெண்களுக்கான வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கான பல்வேறு உத்தரவுகளை இந்த ஆண்டு விதித்தனர். கார் ஓட்ட அனுமதி, சொந்தமாக தொழில் தொடங்க அனுமதி, இணை விமானிகள், விமான ஊழியர்கள் போன்ற துறைகளில் பெண்களுக்கான வாசலை சவுதி திறந்து வைத்தது.
ட்ரம்ப் - கிம்மின் இணைந்த கைகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் முக்கிய ஆயுதமாக எடுத்ததே வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளும், அதன் அதிபர் கிம்முக்கு எதிரான விமர்சனமும்தான். அதனை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் தொடர்ந்தார் ட்ரம்ப். தொடர்ந்து வடகொரியாவின் மீது பொருளாதாரத் தடைகள், போர் எச்சரிக்கை என ட்ரம்ப்பின் மிரட்டல்கள் தொடர்ந்தன.
நிச்சயம் அமெரிக்கா - வடகொரியா இடையே போர் மூளும் என்று உலக நாடுகள் எதிப்பார்த்திருந்த நிலையில் நிகழ்ந்தது அந்த ஆச்சர்ய சந்திப்பு. சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் ஜூன் மாதம் ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் முடிவில் வடகொரியா ஆணு ஆயுதங்களைப் படிப்படியாக அழிக்க சம்மதம் தெரிவித்தது. எனினும் தொடர்ந்து அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனைகள் தொடர்பான மோதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சுனாமி + நிலநடுக்கம் + விமான விபத்து = இந்தோனேசியா
2018 ஆம் ஆண்டில் வழக்கம் போல பெரும் இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டது இந்தோனேசியா. ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 6.8, 7 ஆகப் பதிவாகின. அதன் 132 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நில நடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
இந்த நிலையில் மீண்டும் டிசம்பர் 23-ம் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா,ஜாவீ தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானோர் எண்ணிகை 200-ஐ தாண்டியது.
அத்துடன் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்குச் சென்ற லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் அக்டோபர் மாதம் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 189 பேர் பலியாகினர். இந்தோனேசியாவுக்கு இது மோசமான வருடமாக முடிந்துள்ளது.
குகையில் நடந்த சாகசம்
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10 கி.மீ. நீளமுடைய இந்தக் குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாக கருதப்படுகிறது. வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்த சிறுவர்கள் கடந்த ஜூலை 23-ம் தேதி இந்தக் குகைக்குச் சென்றனர்.
இந்தச் சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றிருந்தார். இந்தக் குகை குறித்து அதிகம் அறிந்திராத இந்தச் சிறுவர்களும், துணைப் பயிற்சியாளரும் உள்ளே சென்று மாட்டிக்கொண்டனர். இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்து கொண்டது.
நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.
தாய்லாந்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் என பெரிய குழுவே அவர்களை மீட்கப் போராடியது. இறுதியாக அவர்கள் அனைவரும், மூன்று பிரிவாக மீட்கப்பட்டனர். இந்த மீட்புப் பணியில் மீட்புப் பணி வீரர் ஒருவர் தனது உயிரைத் தியாகம் செய்தார்.
விமர்சனத்துக்கு ஆளான சூச்சி
ரோஹிங்கியா விவகாரத்தை சூச்சி கையாண்ட விதம் உலக நாடுகளிடையே அவருக்கு எதிராகப் பல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. ரோஹிங்கியா விவகாரம் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கனடாவின் கவுரவ குடியுரிமைப் பதவிக்குத் தகுதியானவரா? என்று கேள்வியையும் சூச்சியை நோக்கி எழுப்பினார்.
இந்த நிலையில், கனடா நாடாளுமன்றத்தில் ரோஹிங்கியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கத் தவறியதன் காரணமாக சூச்சிக்கு வழங்கப்பட்ட கவுர குடியுரிமைப் பட்டத்தைத் திரும்பப் பெறக் கூறிய தீர்மானத்தில் ஒரு மனதாக வாக்களிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மியான்மர் அரசு ரோஹிங்கியா இனப்படுகொலை குறித்த செய்தியை சேகரித்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழாண்டு சிறைத் தண்டனை வழங்கிய விவகாரம் காரணமாக உலக அளவில் சூச்சிக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தன.
kpngpng100
தொடரும் ஏமன் துயரம்
உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் லட்சக்கணக்கான குழந்தைகள் உணவில்லாமல் தவித்து வருவதாகவும், மேலும் சமீபத்தில் நிலவும் விலைவாசி ஏற்றம் காரணமாகவும் ஏமனில் உணவில்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியுள்ளது என்று ’சேவ் தி சில்ட்ரன்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து உலக நாடுகளிடையே எதிர்ப்பை மீறி, ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அந்நாட்டு அரசுடன் இணைந்து உள்நாட்டுப் போரில் சண்டையிட்டு வருகிறது.
முடிவுக்கு வந்த காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம்
கியூபா நாட்டின் புதிய அதிபராக மிகேல் டியஸ் கானெல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் கியூபாவை 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் முடிவு பெற்றது.
அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்
இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே இந்த ஆண்டு கடும் மோதல் எழுந்தது. அமெரிக்காவும் - சீனாவும், மாறி மாறி வரி விதித்து வருகின்றன. அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டுப் பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சீனா வரி விதித்தது.
இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டியது. பிறநாடுகளின் பொருட்களுக்கு தாங்கள் குறைந்த வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் புகார் எழுப்பஇருநாடுகளும் மற்ற நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. இதனால் உலகளாவிய ‘வர்த்தகப் போர்’ நடைபெறும் சூழல் உருவானது.
பதவியை தக்கவைத்த தெரசா மே
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்த ஒப்பந்தம் தொடர்பாக ஆட்சிக்கு எதிராக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் சுமார் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியாத நிலையும் உருவாகியது.
இலங்கையின் அரசியல் சதுரங்கம்
இலங்கை அரசியல் களத்தில் இந்த ஆண்டு பெரும் சதுரங்க விளையாட்டே நடந்து முடிந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அதிபர் சிறிசேனாவுக்கு இடையே நடந்த கருத்து மோதலில், இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா பதவி நீக்கம் செய்யப்பட்டார் .இதனைத் தொடர்ந்து பல எதிர்ப்புக்கு இடையே புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்து, நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.
பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் பெரும்பான்மையை நிரூபித்தார். மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து ராஜபக்சே பதவி விலகி ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமரானார்.
உலகை அசைத்த மரணம்
சவுதியில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக வன்முறைகள் நடந்தேறி வருகின்றன என்றாலும், பத்திரிகையாளர் ஜமால் கொலை விவகாரத்தில் சவுதியின் ரத்தம் படிந்த கரங்கள் இந்தமுறை வெட்டவெளிச்சமானது.
ஜமால் கஷோகிஜி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.
இந்த நிலையில் அவர் துருக்கியில் சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டர். இந்தக் கொலை சம்பவத்தில் சவுதி இளவரசர் முகம்து பில் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுவதால் உலக அளவில் சவுதிக்கு எதிரான அதிர்வலை ஏற்பட்டது.
முதலில் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய சவுதி பின்னர் சாட்சியங்கள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து ஒப்புக் கொண்டது. ஆனால் இதில் இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு இல்லை என்று கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தது.
அதிரவைத்த ஃபேஸ்புக் திருட்டு
லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் ஜின் ’அனாலிட்டிகா’ என்ற இணைய நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின் போது குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்புக்காகப் பணியாற்றி சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் ஃபேஸ்புக் விவரங்களைத் திருடியதாக கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் இது தொடர்பாக நடந்த விசாரணையில் ஃபேஸ்புக் பயனாளர்களின் அனுமதியின்றி அவர்களுடைய தகவல்களைத் திருடியதை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் ஒப்புக்கொண்டது ஃபேஸ்புக் பயனாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சி தந்த சென்டினல் தீவு
அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 35 மைல் தொலைவில் இருப்பதுதான் நார்த் சென்டினல் தீவு. இந்தத் தீவைச் சுற்றி 5 நாட்டிகல் மைல்வரை மனிதர்கள் செல்ல மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவில் உள்ள பூர்வீகக் குடிகளான சென்டினல் பழங்குடி மக்கள் வேற்று மனிதர்களை விரும்பவதில்லை என்பதாலும், அவ்வாறு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாலும் இங்குச் செல்வது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறி கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (வயது 27) மீனவர்கள் உதவியுடன் நார்த் சென்டினல் தீவுக்குச் சென்றார். முதலில் ஜான் ஆலனை ஏதும் செய்யாமல் இருந்த அந்தப் பழங்குடியினர், பின்னர் அம்பு எய்திக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
4-வது முறையாக அதிபரான புதின்
ரஷ்ய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் 76 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 4-வது முறையாக புதின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடரும் ஈரான் - அமெரிக்கா மோதல்
ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், ட்ரம்ப்பின் மிரட்டலைச் சிறிதும் பொருட்படுத்தாத அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி ஈரான் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு அணு ஆயுத சோதனையைப் பயன்படுத்தும் என்றார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் அந்நாட்டுடன் எந்த நாடும் கச்சா என்ணெய் ஏற்றுமதி செய்யக் கூடாது என்றும் தெரிவித்தது.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலைத் திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அரசக் குடும்பம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களது திருமணம் மே மாதம் நடந்தது.
சிரியாவில் அமெரிக்கப் படை வெளியேறும்: ட்ரம்ப்
சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதால், அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முற்றிலுமாக வெளியேறும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள்அமெரிக்காவின் முடிவை விமர்சித்தன.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான்
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவரும், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்று பாகிஸ்தானின் பிரதமராக ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார்.
இவரது பதவியேற்பு விழாவில் பஞ்சாப் மாநில அமைச்சரும், இந்திய கிரிக்கெட் வீரருமான சித்து கலந்துகொண்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
மறைந்தார் ஹாக்கிங்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இயற்பியலாளரும், விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் மாதம் காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதிலும் உள்ள தலைவர்கள், விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்தனர்.
கிம் - மூன் சந்திப்பு
அமெரிக்காவுடன் ஏற்பட்ட சமாதானத்துக்குப் பிறகு இனி அணு ஆயுத சோதனைகளை நடத்தப் போவதில்லை என்று அறிவித்த வடகொரிய அதிபர் கிம், சுமார் 50 வருடங்களைக் கடந்த கொரிய போருக்குப் பிறகு தென் கொரிய எல்லைக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சென்ற வரலாற்று நிகழ்வு நடந்தது.
மெக்சிகோ அதிபராக ஆண்ட்ரஸ்
மெக்சிகோவில் பல வருடங்களுக்குப் பின்னர், அதிபராக இடதுசாரி கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரஸ் மானுவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் மெக்சிகோவில் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற அதிபர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ்
ரஷ்யாவில் இந்த வருடம் கோலாகலமாகத் தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் நான்காவ்து முறையாக உலகக் கோப்பையை வென்றது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
2 days ago