‘ஒபக்’ அமைப்பில் இருந்து விலகும் கத்தார்: கச்சா எண்ணெய் சந்தையில் கோலோச்சும் சவுதியை ஓரம்கட்டும் திட்டம்?

By நெல்லை ஜெனா

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்’ அமைப்பில் இருந்து விலகப்போவதாக கத்தார் அறிவித்துள்ளது கச்சா எண்ணெய் சந்தையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் மிகப்பெரிய பின்னடைவையும்,  பொருளாதார பாதிப்பையும் கத்தார் சந்தித்தது. இதன் பிறகு ரஷ்யா உள்ளிட்ட  நாடுகள் தலையிட்டு பிரச்சினையின் தீவிரத்தை தணித்தன.

இந்நிலையில், எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்கில்’ இருந்து வெளியேறப்போவதாக கத்தார் இன்று திடீரென அறிவித்துள்ளது.

இதுகுறித்து கத்தார் பெட்ரோலியத்துறை அமைச்சர் சத் அல் - காஃபி தோஹாவில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த முடிவு அமலுக்கு வருகிறது. ‘ஒபக்’ நாடுகளின் கூட்டத்தில் இதனை அறிவிப்போம். கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் எங்கள் இடத்தை நிலை நிறுத்திக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 48 லட்சம் பேரல்களில் இருந்து 65 லட்சம் பேரல்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். அதுபோலவே திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியை 7.7 கோடி டன்களில் இருந்து 11 கோடி டன்களாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இனிமேல் இயற்கை எரிவாயு வர்த்தகத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்’’ எனக் கூறினார்.  

கத்தாரின் இந்த முடிவு பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. உலக அளவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள கத்தார் அதனை அதிகரிக்கப்போவதாகவும், கச்சா எண்ணெய் உற்பத்தியை கணிசமாக உயர்த்த போவதாக கூறியுள்ளதும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெய் சந்தையை பொறுத்தவரை சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ள ‘ஒபக்’ தவிர, ரஷ்யா போன்ற அந்த அமைப்பில் இல்லாத நாடுகளும் கோலோச்சி வருகின்றன. ‘ஒபக்’ நாடுகள் உற்பத்தியை குறைத்தாலும் கூட அந்த அமைப்பில் இல்லாத மற்ற நாடுகள் உற்பத்தியை சமன் செய் வந்தன.

சவுதி - ரஷ்யா ஒப்பந்தம்

இந்த நிலையில் சவுதி அரேபியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே சமீபத்தில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதன்படி இருநாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன.

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பால் அக்டோபரில் 80 டாலர்களாக உயர்ந்த விலை தற்போது 60 டாலர்கள் என்ற அளவில் கட்டுக்குள் உள்ளது. சவுதி - ரஷ்யா ஒப்பந்தத்தால் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில் தான் 1960களில் இருந்து ‘ஒபக்’ அமைப்பில் அங்கம் வகித்து வரும் கத்தார் அதில் இருந்து வெளியேறப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் சந்தையில் கோலோச்சும் சவுதிக்கு ‘செக்’ வைக்கவும், அதேசமயம் தனக்கான இடத்தை நிலை நிறுத்தவும் ஈரான் பாணியில் பயணத்தை தொடங்க கத்தார் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.

கச்சா எண்ணெய் சந்தையில் கத்தாரின் பங்கு மிக குறைவு என்றாலும், இயற்கை எரிவாயு சந்தையில் முதலிடத்தில் உள்ள கத்தாரின் நடவடிக்கை தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. கச்சா எண்ணெய் பொறுத்தவரை பேரல் ஒன்றின் விலை இன்று 5.3 சதவீதம் உயர்ந்து 62.60 டாலர்களாக உயர்ந்து உள்ளது.

கச்சா எண்ணெய் விலையை தங்கள் கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்க ‘ஒபக்’ நாடுகளுடன் ரஷ்யா போன்றவை இணைந்து செயல்படும் நிலையில் கத்தாரின் தனிப்பாதை எந்தஅளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.

ஈரான் கச்சா எண்ணெய் வணிகத்தை முடக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பலன் அளிக்காத நிலையில் ஈரானை போலவே கத்தாரும் தனிப்பாதையில் பயணம் செய்யுமா என்ற கேள்வியும் எழுகிறது.  அதுபோலவே கத்தார் எடுத்துள்ள முடிவு துணிச்சலானது என்றும், அரபு நாடுகளின் புறக்கணிப்புக்கு பிறகு அதன் பொருளாதார வலிமை குறையவில்லை என்பதை காட்டும் விதத்தில் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்