மும்பை தாக்குதல்: இந்தியர்களுக்கு நீதிகிடைக்க அமெரிக்கா துணை நிற்கும்: அதிபர் ட்ரம்ப் உறுதி

By செய்திப்பிரிவு

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதிகிடைக்கும் வகையில் இந்தியர்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி மும்பையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் ரயில் நிலையம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர்.

மும்பை தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருந்த, மூளையாகச் செயல்பட்டவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்தோ, அவர்களுக்கு உதவியவர்கள் குறித்தோ அல்லது திட்டம் வகுத்தவர்கள் குறித்தோ தகவல் தெரிவித்தால் ரூ.35 கோடி பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு நேற்று அறிவித்திருந்தது.

இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மும்பை தாக்குதலை நினைவு கூர்ந்து, ட்விட்டரில் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், “ மும்பை தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைத்து இந்திய மக்களுக்கும் உரிய நீதி கிடைக்க அமெரிக்க இந்திய மக்களுக்குத் துணை நிற்கும். இந்தத் தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாத்தை ஒருபோதும் வெல்லவிடமாட்டோம். வெற்றிக்கு அருகேகூட வரவிடமாட்டோம் “ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தீவிரவாதித்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும். மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை பாகிஸ்தான் நீதிமுன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தடை செய்துள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE