பாலியல் வன்முறை, ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டெனிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராட்டுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை எதிர்த்து போரிடும் இந்த இருவரும் உலகம் முழுவதும் பிரபலமானவர்கள். 63 வயதாகும் முக்வேஜா காங்கோ நாட்டின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர். நாடியா, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்.
நோபல் பரிசு அறிவிப்பு வந்ததும், `பல பெண்களின் முகத்தில் அங்கீகாரம் கிடைத்ததால் ஏற்படும் சந்தோஷத்தை பார்க்கிறேன்’ என முக்வேஜா கூறியிருக்கிறார். `‘இந்த நோபல் விருதை யஸிதி இனத்தவருக்கும் அனைத்து இராக் மக்களுக்கும் குர்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிர் தப்பிய அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்’’ எனக் கூறியிருக்கிறார் முராட். ‘`ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் யஸிதி மக்கள் அனுபவித்த கொடுமைகளை உலகறியச் செய்ய எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்புக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். சர்வதேச அரசியலில் ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் தலையெடுக்கும்போது, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பெருமளவு அதிகரிக்கின்றன’’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் முராட்டுக்கும் முக்வேஜாவுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம் மூலம் உலக நாடுகள் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முடிவு கட்ட முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர்களில்பாதிக்கப்பட்டது போர் வீரர்கள் மட்டும்தான். ஆனால் இப்போது அப்பாவி பொது மக்களும் பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். போரின்போது, இவர்கள் கேடயமாகப் பயன்படுத்தப்படுவதோடு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, கட்டாயப்படுத்தி தாயாக்குவது, கருவை கலைப்பது, அடிமையாக விற்பனை செய்வது என்பதெல்லாம் வழக்கமாகி விட்டது.
‘`போர் நடக்கும் பகுதிகளில் ராணுவ வீரராக இருப்பதை விட, பெண்களாய் இருப்பதுதான் மிகவும் ஆபத்து’’ என காங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப் படையின் முன்னாள் கமாண்டர் மேஜர் பேட்ரிக் காமர்ட் கூறியிருக்கிறார். அதோடு, அகதிகளாய் வரும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களும் அதிகரித்து வருகின்றன. போர் நடக்கும் பகுதிகளில் இருந்து தப்பி வரும் பெண் அகதிகளை எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களும் குடியுரிமை அதிகாரிகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிறார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகளைப் போல, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைக் கணக்கெடுப்பதால் எந்தப் பயனும் இல்லை. மேலும் போர் நடக்கும் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நடப்பது புதிய விஷயமும் இல்லை. கடந்த 1932 முதல் 1945 வரை ஜப்பான் ராணுவம் தனது வீரர்களுக்காக போர் நடக்கும் பகுதிகளில் உள்ள பெண்களை விருந்தாக்கி உள்ளது.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் இந்தப் பிரச்சினை ஜப்பானை இன்னமும் மிரட்டி வருகிறது. ஜெனீவா ஒப்பந்தத்தின்படி, போர் நடக்கும் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் இருந்து பாதுகாப்பு கிடைத்தாலும், 1998-ல் தான் பெண்களுக்கு எதிரான வன்முறையை போர்க் குற்றமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது ஐ.நா. சபை.
நோபல் வென்ற முராட்டும் முக்வேஜாவும் மிகவும் மன வேதனை தரும் பிரச்சினையை உலகறியச் செய்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால்,பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒடுக்க உலக நாடுகள் எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப் போகின்றன என்பதுதான் முக்கியம். போர் பகுதிகளில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பேசுவதாலோ அல்லது அகதிகள் முகாம் அமைத்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என பெருமையாகக் கூறிக் கொள்வதாலோ, குடும்பத்தை இழந்து, தீவிரவாதிகளின் கையில் சிக்கி உடல் வலியையும் அனுபவிக்கும் பெண்களின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது.
டாக்டர் தர் கிருஷ்ணசுவாமி எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர். வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.
தமிழில்: எஸ்.ரவீந்திரன்
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago