சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏன்?

By செய்திப்பிரிவு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்த நாட்டின் விண்வெளி அமைப்பான நாசா இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.

இருவரும் 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் 4 வீரர்களுக்கு பதிலாக இருவர் மட்டுமே சென்றனர். தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் ஆகியோர் உட்பட 7 பேர் உள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸும், பேரி வில்மோரும் சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை பூமிக்கு அழைத்து வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் என்டூரன்ஸ் விண்கலம் கடந்த 12-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் விண்கலம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச் 14-ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ஏவுகணை மூலம் என்டூரன்ஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். இந்த விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மெக்கிளைன், நிக்கோலி அயர்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி, ரஷ்ய விண்வெளி வீரர் கிரிஸ் பெஸ்கோவ் ஆகியோர் செல்கின்றனர். மார்ச் 15-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தில் என்டூரன்ஸ் விண்கலம் இணையும்.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து மார்ச் 19-ம் தேதி டிராகன் விண்கலம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர். வானிலையை பொறுத்து தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிபுணர்கள் கூறியதாவது: சர்வதேச விண்வெளி மையத்தில் விண்கலங்களை இயக்க 2 தளங்கள் மட்டுமே உள்ளன. இதில் ஒரு தளத்தில் டிராகன் விண்கலம் ஒன்று நிரந்தரமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் தீ விபத்து உட்பட ஏதாவது ஓர் அசம்பாவிதம் நேரிட்டால் இந்த விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் தப்பிச் செல்ல முடியும்.

மற்றொரு தளத்தின் மூலம் மட்டுமே பூமிக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கும் இடையே விண்கலங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 9-வது குழு சென்ற டிராகன் விண்கலம் 2-வது தளத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. 10-வது குழு என்டூரன்ஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்கிறது. அவர்கள் சென்றடைந்த பிறகு சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேர் அடங்கிய 9-வது குழு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு பத்திரமாக திரும்பும்.

சுனிதா வில்லியம்ஸ் சுமார் 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் தங்கியிருப்பதால் பூமிக்கு திரும்பிய உடன் அவரால் நடக்க முடியாது. அவருக்கு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படும். சுமார் 45 நாட்கள் முதல் சில மாதங்களுக்கு பிறகே அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இவ்வாறு சர்வதேச விண்வெளி ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்