பாகிஸ்தானில் 500 பயணிகளுடன் ரயில் கடத்தல்: தீவிரவாதிகளால் 30 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை - முழு விவரம்

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் நேற்று சிறைபிடித்தது. அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு உள்ளனர்.

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

அப்போது பலுச் விடுதலை படையை சேர்ந்தவர்கள், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறைபிடித்தனர். ரயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்தனர். அவர்களுக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு உள்ளனர்.

214 வீரர்கள் சிறைபிடிப்பு: இதுகுறித்து பலுச் விடுதலை படை (பிஎல்ஏ) வெளியிட்ட அறிக்கை: ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை நாங்கள் சிறை பிடித்து உள்ளோம். ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள், பயணிகளை விடுதலை செய்துவிட்டோம். பாதுகாப்பு படையை சேர்ந்த 214 வீரர்களை மட்டுமே சிறை பிடித்து உள்ளோம். எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் எங்கள் பிடியில் உள்ள அனைத்து பிணைக்கைதிகளை யும் கொலை செய்வோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 9 பெட்டிகள் இருந்தன. 500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரயிலை தீவிரவாதிகள் சிறை பிடித்து உள்ளனர். சம்பவ பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பாறைகள் நிறைந்த மலைப்பகுதி ஆகும். பாதுகாப்பு படை வீரர்களை மட்டுமே பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 500 பயணிகளுமே அவர்களிடம் பிணைக்கைதிகளாக உள்ளனர்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி கூறும்போது, “ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். அப்பாவி பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் தப்ப முடியாது" என்றார்.

பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ராணா முகமது கூறியதாவது: ரயில் சிறைபிடிக்கப்பட்ட பகுதியை ஒட்டிய என்-65 நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவ பகுதி ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையை ஒட்டிய மலைப்பகுதி ஆகும். அந்த இடத்துக்கு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ராணுவ வீரர்கள் முன்னேறி சென்றால் மலைப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் எளிதாக சுட்டு வீழ்த்தும் வாய்ப்பு இருக்கிறது.

ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தோம். ஆனால் சுரங்கப் பாதைக்குள் ரயில் நிற்கிறது. வான் வழி தாக்குதல் நடத்தினால் பயணிகளும் பாதிக்கப்படுவார்கள். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம். முதல்கட்டமாக ரயில் பயணிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில் சம்பவ பகுதிக்கு நிவாரண ரயில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ராணுவ வீரர்கள், மருத்துவர்கள் அடங்கிய மற்றொரு ரயிலும் சம்பவ பகுதிக்கு விரைந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு ரயில்வே பாலத்தை தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்தனர். இதனால், பெஷாவர்-குவெட்டா இடையே சில மாதங்களாக ரயில்கள் இயக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் ரயில் சேவையை தொடங்கினோம். அதற்குள் ஒரு ரயிலையே தீவிரவாதிகள் சிறைபிடித்து உள்ளனர். சம்பவ பகுதியில் 17 சுரங்க பாதைகள் உள்ளன. இதன் காரணமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக இயக்கப்படுவது வழக்கம். இதை பயன்படுத்தி 8-வது சுரங்கப்பாதையில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் சிறைபிடித்து உள்ளனர். அனைத்து பயணிகளையும் பத்திரமாக மீட்க தீவிரவாதிகளுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு சில வெளிநாடுகள் உதவி வருகின்றன.

ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும்போது தீவிரவாதிகள் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. தீ பிழம்புகளுக்கு நடுவே ரயில் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர் மற்றும் சில பயணிகள் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிகிறது. அவர்களை மீட்க முன்னுரிமை அளித்து வருகிறோம். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “ரயிலில் ராணுவ வீரர்கள், போலீஸார் மற்றும் ஐஎஸ்ஐ உளவாளிகள் பயணம் செய்தனர். இதை முன்கூட்டியே அறிந்து அந்த ரயில் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படை வீரர்களை விடுவிக்க, சிறையில் உள்ள பலுச் விடுதலைப் படை வீரர்களை விடுதலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப்படலாம்" என்று தெரிவித்தன.

பலுச் விடுதலை படை பின்னணி: பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம் அந்நாட்டின் மொத்த பரப்பளவில் 44 சதவீதத்தை கொண்டுள்ளது. 1947-48-ல் தனி நாடு கோரி இப்பகுதி மக்கள்போராட்டம் நடத்தினர். ராணுவத்தின் மூலம் அவை நசுக்கப்பட்டன. அப்போது 2 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இச்சூழலில் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து கடந்த 1970-ம் ஆண்டில் பலுச் விடுதலைப் படை உருவானது. இது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்தி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்