சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவல் என்ற செய்தி வந்தவுடனேயே உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உலக நாடுகள் வரை அனைத்தும் பரபரப்பாகி தொற்று தொடர்பான தகவல்களைத் தேடத் தொடங்கியுள்ளன. இந்தத் தேடலும், அதன் கூடவே ஒட்டிக் கொண்ட பதற்றமும் இயல்பே என்று சொல்லும் அளவுக்கு கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் பதிவான கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோடிக் கணக்கில் உயிரிழப்புகள், சர்வதேச அளவில் பொருளாதார பின்னடைவு எனப் பல்வேறு பாதிப்புகளால் உலகம் பல மாதங்கள் ஸ்தம்பித்தது. உருமாறி உருமாறி கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் உண்மையில் எல்லோரும் மறக்க நினைக்கும் ஒரு கொடுங் கனவு தான்.
அதனாலேயே சீனாவில் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (Human Metapneumovirus) என்ற புதிய வகை வைரஸ் பரவுகிறது என்றவுடனேயே அது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலக நாடுகளும் எச்சரிக்கையுடன் அதை அணுகத் தொடங்கியுள்ளன.
எச்எம்பி வைரஸ் என்றால் என்ன? இதை மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சாதாரண சளித் தொல்லையை ஏற்படுத்தும் ஃப்ளூ வைரஸ் போன்றது எனலாம். சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் இது. இந்த வகை வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்குப் பரவும். வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருட்கள், புழங்கிய இடங்களில் இருந்து இன்னொருவருக்குப் பரவும்.
தொற்று ஏற்பட்ட நபருடன் கை குலுக்கிவிட்டு கையை கண்கள், மூக்கு, வாயில் வைத்தல், அவர் தும்மும் போதோ இருமும் போதோ அருகில் இருத்தல் போன்றவற்றாலும் தொற்று பரவும். கரோனா பரவலுக்கும் இதே காரணம் தான் சொல்லப்பட்டது என நீங்கள் யோசிக்கலாம். எல்லா ஃபோமைட் போர்ன் (fomite borne) அதாவது வைரஸ் பாதித்தவர் தொட்டதால் உயிரற்ற பொருட்களின் மீது வைரஸ் ஒட்டி அதன்மூலம் மனிதர்களுக்கு வைரஸ் பரவுதல் ஒரே பாணியில் தான் நடைபெறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
மேலும், ஃப்ளூ வைரஸ்கள் மிகவும் புத்திசாலிகள் என்கின்றனர். அதாவது அதன் மரபணு மிக வேகமாக தன்னை உருமாற்றிக் கொள்ளக் கூடியது. அதனால் வழக்கமான ஃப்ளூ வைரஸ் மனிதர்களிடம் சற்று கவனிக்கத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸாக உருமாறும் போது அதற்குப் பெயரும், கூடவே அதனைச் சுற்றிய பரபரப்பு அதிகரிக்கிறது எனக் கூறுகிறர் மருத்துவர் ஒருவர். ஃப்ளூ வைரஸின் மரபணுவில் இருக்கும் தன்னைத்தானே உருமாறிக் கொள்ளும் வேகத்துக்கு நம்மால் ஈடு கொடுத்து பெயர் வைக்க முடியாது. அவ்வளவு வேகமாக, விதவிதமாக அது உருமாறிக் கொள்ளும். எல்லாவற்றிற்கும் பெயர் வைத்தால் புயலுக்கு பெயர் வைப்பதுபோல் வைத்துவிட்டு வருமா? வராதா என்ற கணிப்புகளை வெளியிடும் சூழல் உருவாகும். அதனால் தேவைற்ற பீதிகளே உருவாகும் என்று அந்த மருத்துவர் கூறுகிறார்.
கரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா என்ற தகவல் ஏதும் இல்லை. புதிய வைரஸால் சிறார் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது என்று கேட்டபோது, இதுபோன்ற வைரஸ்கள் சிறார், முதியவர் என்றில்லை யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதோ அவர்களை எளிதாக, அதிகமாக தாக்கும் என்றார்.
WHO கேள்வியும், சீன மறுப்பும்! சீன மருத்துவமனைகளில் காய்ச்சல், தொண்டை வலி பாதிப்புகளுக்காக மக்கள் கூட்டங்கூட்டமாக காத்திருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை அமல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், புதிய வைரஸ் குறித்த விவரங்களை அளிக்குமாறு சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், கரோனா போன்ற புதிய வைரஸ் பரவுவதாக எழுந்த சந்தேகங்களை மறுத்துள்ளது.
முன்னதாக, சீன அரசின் நோய்க் கட்டுப்பாட்டு முகமை இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், “நிமோனியா போன்ற பாதிப்பு ஏற்படுவதாக எழுந்துள்ள புகார்களை கண்காணித்து வருகிறோம். குளிர் காலம் என்பதால் சுவாசப் பாதை தொற்றோடு பலரும் மருத்துவமனைகளை நாடுகின்றனர். டிசம்பர் 16 முதல் 22 வரை இத்தகைய தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.” எனத் தெரிவித்திருந்தது. ஆனால் எச்எம்பி வைரஸ் பற்றி எதுவும் குறிப்பிட்டுத் தெரிவிக்கவில்லை.
தற்போது புதிய வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு தகவல்களைக் கேட்டுள்ள நிலையில், சீனா விளக்கமளித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “சீனாவில் குளிர் காலத்தில் எப்போதும் சுவாசப் பாதை தொற்று நோய்கள் அதிகரிப்பது இயல்பே. சீன அரசு குடிமக்கள், சுற்றுலா பயணிகளின் உடல் நலனின் எப்போதுமே அக்கறை கொண்டுள்ளது. சீனாவில் தொற்று நோய் பரவல் ஏதும் இல்லை. சீனாவுக்கு சுற்றுலா பயணிகள் தாராளமாக வரலாம். மருத்துவமனைகளில் கூட்டம் இருக்கலாம். ஆனால் இந்த வைரஸ் வீரியமற்றது. பரவலும் மிகமிகக் குறைவு.
சீனாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சீன தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் படித்தாலே தேவையற்ற அச்சங்கள் தீரும்.” என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த விளக்கம் ‘சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல்’ வகையறா செய்திகளுக்கு பதிலாக அமைந்துள்ளது எனலாம்.
இந்தியா சொல்வது என்ன? சீனாவில் பரவும் புதிய வைரஸால் நாடு முழுவதும் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார சேவைகள் துறை இயக்குநர் ஜெனரல் மருத்துவர் அடுல் கோயல் கூறுகையில், “எச்எம்பி வைரஸ் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை. மெடாநிமோ வைரஸ் மற்ற சுவாசப்பாதை தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்களைப் போல மிகச் சாதாரணமானதே.
சாதாரண சளி ஏற்படுத்தும் வைரஸ் போன்றதே. உள்நாட்டில் சுவாசப் பாதை தொற்றால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தரவுகளையும் ஆராய்ந்துவிட்டோம். டிசம்பர் 2024 தரவுகளின் படி நாட்டில் வைரஸ் தொற்று பாதிப்பு எதுவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கவில்லை. எச்எம்பி தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சைக்காக ஆன்ட்டி வைரல் மருந்துகள் ஏதும் தேவையில்லை.” என்று கூறியிருக்கிறார்.
வைரஸ் தொற்றுகள் குறித்த செய்திகளை நிதானமாக அணுகினால் தேவையற்ற அச்சத்தையும், பொதுமக்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம். மேலும், கைகளைக் கழுவுதல், அதிக நெருக்கடியான, காற்று மாசு நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுதல், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுதல் போன்ற பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ள வைரஸ் தொற்று காலத்தில் மட்டுமல்லாது எப்போதுமே தற்காப்பை நல்கும்.
முக்கிய செய்திகள்
உலகம்
51 mins ago
உலகம்
3 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago