தென்கொரிய விமான விபத்தில் 2 பேர் மட்டும் உயிர் தப்பியது எப்படி?

By செய்திப்பிரிவு

கடந்த 29-ம் தேதி தென்கொரியாவின் முவான் நகர சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்தனர். 2 விமான ஊழியர்கள் மட்டும் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தென்கொரிய விமான போக்குவரத்துத் துறை நிபுணர்கள் கூறியதாவது: விமானத்தின் முன்பகுதி இருக்கைகள் பிசினஸ் கிளாஸ் (முதல் வகுப்பு) என்று அழைக்கப்படுகின்றன. இந்த இருக்கைகளுக்கான கட்டணம் அதிகம். பின் பகுதி இருக்கைகள் எக்னாமிக் கிளாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் குறைவு.

பெரும்பாலும் பின்பகுதி இருக்கைகளை பயணிகள் விரும்புவது கிடையாது. கழிவறை, அவசர கால இருக்கை, கால் வைக்க போதுமான இடமின்மை உள்ளிட்ட காரணங்களால் பின் இருக்கைகளை பயணிகள் வெறுக்கின்றனர்.

ஆனால் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளும்போது விபத்தின்போது முன்இருக்கை பயணிகள் உயிர்பிழைக்க 49 சதவீதம் மட்டுமே வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. அதேநேரம் நடுப்பகுதி பயணிகள் உயிர் பிழைக்க 59%, பின்இருக்கை பயணிகள் உயிர்பிழைக்க 69 % வாய்ப்பு இருக்கிறது.

தென்கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில், வால் பகுதியில் கழிவறை அருகே கடைசி இருக்கைகளில் அமர்ந்திருந்த ஜேஜு ஏர் கோ விமான நிறுவனத்தின் ஆண் ஊழியர் லீ மோ (33), விமான பணிப்பெண் குவான் கு (25) ஆகியோர் மட்டுமே உயிர் பிழைத்து உள்ளனர்.

விபத்துக்குள்ளான போயிங் 737-800 ரக விமானத்தின் அனைத்து பாகங்களும் தீயில் எரிந்து உருக்குலைந்துவிட்டன. ஆனால் வால் பகுதி மட்டும் சேதமடையவில்லை. இதன்காரணமாக வால் பகுதியில் அமர்ந்திருந்த 2 ஊழியர்களும் உயிர் தப்பி உள்ளனர். இவ்வாறு விமான போக்குவரத்து துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.

உயிர் தப்பிய ஆண் ஊழியர் லீ மோ கூறும்போது, “விமானம் தரையிறங்கும்போது எனது இருக்கையில் அமர்ந்து சீல் பெல்டை அணிந்தேன். அதன்பிறகு நடந்தது நினைவில் இல்லை. முழுமையாக மயங்கிவிட்டேன்" என்று தெரிவித்தார். விமான விபத்தில் அவருக்கு பக்கவாத பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விமான பணிப்பெண் குவான் கு கூறும்போது, “விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்து, ஒட்டுமொத்த விமானமும் வெடித்துச் சிதறியது" என்று தெரிவித்துள்ளார். விமானப் பணிப்பெண்ணுக்கு வலது, இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு குறைபாடு: முவான் விமான விபத்து குறித்து சிறப்பு குழு ஆய்வு நடத்தி முதல்கட்ட அறிக்கையை தென்கொரிய அரசிடம் சமர்ப்பித்து உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

விமான ஓடு பாதை முடியும் இடத்தில் இருந்து சுமார் 240 மீட்டர் தொலைவுக்கு திறந்தவெளி பகுதி இருக்க வேண்டும். ஆனால் முவான் விமான நிலைய ஓடுபாதையில் 200 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே திறந்தவெளி பகுதி இருக்கிறது.

விபத்துக்குள்ளான விமானம் கான்கிரீட் சுவரில் மோதி வெடித்துச் சிதறி உள்ளது. அந்த கான்கிரீட் சுவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம். விபத்து நேரிட்டபோது பறவைகளை விரட்ட ஒரு நபர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க நிபுணர் சந்தேகம்: அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த விமான போக்குவரத்து துறை நிபுணர் ராபர்ட் கிளிப்போர்ட் கூறும்போது, “பறவை மோதியதால் தென்கொரிய விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதை நம்ப முடியவில்லை. பறவை மோதுவதால் லேண்டிங் கியருக்கு (சக்கரங்கள்) பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. போயிங் 737-800 ரக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்திருக்கும். இதன்காரணமாகவே மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

68,000 விமான டிக்கெட் ரத்து: தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் ஜேஜு ஏர் கோ விமானம் விபத்தில் சிக்கியதால் அந்த நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஜேஜு ஏர் கோ நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த 68,000 விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறும்போது, “சுமார் 33,000 உள்நாட்டு விமான டிக்கெட்டுகளும் சுமார் 34,000 வெளிநாட்டு விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. பங்குச் சந்தையில் எங்கள் நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இது எங்களுக்கு சோதனை காலம். இதை சமாளித்து மீண்டெழுவோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

மேலும்