இந்து மத தலைவர் கைதுக்கு ஷேக் ஹசீனா கண்டனம் - உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவாமி லீக்கின் எக்ஸ் பதிவில் ஷேக் ஹசீனா, "சனாதன மத சமூகத்தின் உயர்மட்ட தலைவர் ஒருவர் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். சிட்டகாங்கில் ஒரு கோயில் எரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள், மடங்கள் மற்றும் அகமதியா சமூகத்தினரின் வீடுகள் தாக்கப்பட்டன, சேதப்படுத்தப்பட்டன, சூறையாடப்பட்டன, தீவைக்கப்பட்டன. மத சுதந்திரத்துக்கும், அனைத்து சமூக மக்களின் வாழ்க்கைக்கும், அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ், தேச விரோத சட்டத்தின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வங்கதேசத்திலும் இந்தியாவிலும் தொடர் போராட்டங்கள் நடந்தன. இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது.

இது தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “எந்த மதமும் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் மூத்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, இஸ்கான் அமைப்பினருடன் பேசினேன். இது வேறு ஒரு நாட்டின் விவகாரம். எனவே, இதில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் நாங்கள் அவர்களுடன் (மத்திய அரசு) இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் குறிவைக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என வலியுறுத்தி ஓய்வுபெற்ற நீதிபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் அவருக்கு கடிதம் எழுதினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீரின் முன்னாள் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத், “ஓய்வுபெற்ற நீதிபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் உள்பட சுமார் 75 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். வங்கதேசத்தில் இந்துக்கள் அட்டூழியங்களை எதிர்கொள்கிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இது வங்கதேசத்தை மட்டும் பாதிக்காது. அதை சுற்றியுள்ள பிராந்தியத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மொத்த பிராந்தியத்திலும் இது சிக்கலை ஏற்படுத்தும். இது ஒரு நாட்டின் உள்விவகாரம் அல்ல. எனவே, இது குறித்து ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகளில் முறையிட வேண்டும். பிரதமர் மோடி ஒரு உலகத் தலைவர். அவர் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள். எனவே, அவர் இதில் தலையிட வேண்டும். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும். இதற்கு வெளியில் இருந்து உரிய அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.” என குறிப்பிட்டார்.

இந்நிலையில், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ஹசீனா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நடந்த பரவலான போராட்டங்களை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அவர் இந்தியாவுக்குத் தப்பி வந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற திரு.யூனுஸ் பொறுப்பேற்றார்.

யூனுஸ் பொறுப்பேற்ற பிறகும், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான அட்டுழியங்கள் தொடர்வதாக அந்நாட்டின் சிறுபான்மை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன. வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற தீவிரவாதக் குழுக்கள் எழுச்சி பெற்று வருவதாக செய்திகளும் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

2 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்