பெய்ரூட்: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் ஓராண்டுக்கும் மேலாக இருதரப்புக்கும் இடையே நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
இதன் பலனாக லெபனான் நாட்டில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் படைகள், படிப்படியாக வெளியேறும் என்றும், மீண்டும் ஹிஸ்புல்லா அமைப்பின் மறுகட்டமைப்பை தடுக்கும் வகையில் அந்த நாட்டின் தெற்கு பகுதி பாதுகாப்பினை ராணுவம் உறுதி செய்யும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் லெபனான் நாட்டு ராணுவம் தெற்கு பகுதிக்கு செல்லவும், ஐ.நா-வின் 1701 தீர்மானத்தின் கீழ் அதன் பணியை மேற்கொள்ள தயாராகி வருவதாக கூறியுள்ளது. போர் நிறுத்தம் காரணமாக தெற்கு லெபனான் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். கார்கள் அந்த நாட்டின் தெற்கு பகுதியை நோக்கி அணிவகுத்தவாறு உள்ளன. இருப்பினும் எல்லை பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இஸ்ரேல் படைகள் உள்ளனர். அந்த கிராமங்களுக்கு மக்கள் திரும்ப முடியாத சூழல் நிலவுகிறது.
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்தத்தை ஈரான் உட்பட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன. அதே நேரத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் இதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை என்று சிலர் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறி செயல்பட்டால் தகுந்த பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
» அதானி விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி - இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
இஸ்ரேல் - லெபனான் மோதல் ஏன்? சுதந்திரப் போரின் தொடக்கத்தில் (1948), இஸ்ரேலுக்கு லெபனான் ஒரு பிரச்சினையை உருவாக்கியது. இந்தப் போரில் லெபனான் ராணுவம் அரபுப் படைகளுக்கு ஆதரவளித்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஓ) உருவாக்கப்பட்டு லெபனானில் போராளிகளை பணியில் அமர்த்தியதும் பிரச்சினை மேலும் தீவிரமானது. தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு இன்னொரு அச்சுறுத்தலாக 1982-ல் ஈரானின் புரட்சிகரக் காவலர்களால் ஹிஸ்புல்லா படை லெபனான் மண்ணில் நிறுவப்பட்டது. கடந்த 2000-மாவது ஆண்டு தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற இந்தப் படை வழிவகுத்தது.
ஹிஸ்புல்லாக்களின் கொரில்லா தாக்குதல்கள் உலகமே கண்டு அஞ்சிய தாக்குதல் உத்தியாக பிரபலமானது. அப்போது தொடங்கி இஸ்ரேலுக்கு பெரும் சவாலாகவே இந்த ஹிஸ்புல்லாக்கள் இருக்கின்றனர். “பாலஸ்தீனிய நிலங்களை ஆக்கிரமித்து இஸ்ரேல் தன்னை ஒரு நாடாக நிறுவிக்கொண்டது. அது ஒரு சட்டவிரோத நாடு. இஸ்ரேல் இல்லாத அரபு பிராந்தியம் வேண்டும்” என ஹிஸ்புல்லா விரும்புகிறது. இதனால் அவ்வப்போது இஸ்ரேல் - ஹிஸ்புல்லாக்களுக்கு இடையே மோதல்கள், தாக்குதல்கள் நடப்பது தொடர்கதையாகவே இருக்கிறது.
இஸ்ரேல் நீண்ட காலமாக ஹிஸ்புல்லாவை அதன் எல்லைகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது. நாளுக்கு நாள் அது வளர்ந்து பயங்கர ஆயுதக் குழுவாக உருவாகி வருவது இஸ்ரேலுக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. மேலும், சிரியாவில் அது வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதை இஸ்ரேல் தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், ஈரானின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு மூலம் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு இஸ்ரேல் தரப்பும் பதிலடி கொடுத்தது. அதில் கடந்த செப்டம்பர் மாதம் பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புத் தாக்குதலை இஸ்ரேல், லெபனானில் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago