‘போரில் வென்றால், போரை வென்றதாகாது!” என்றார் எர்னஸ்ட் ஹெம்மிங்வே. ஆனால், போரில் வெல்வதுதான் தனது பராக்கிரமத்தை உறுதிப்படுத்தும் என்பதே உலக நாடுகளின் புரிதலாக இருக்கிறதோ என்று ஐயம் கொள்ளும் அளவுக்கு ஆங்காங்கே போர். ஆப்பிரிக்க நாடுகளின் உள்நாட்டுப் போர், அலைகள் போல் ஓய்வதே இல்லை. அதனால் அவை எப்போதும் பெரிதாக ஊடக வெளிச்சத்துக்கு வருவதில்லை. ஆனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் என்றால், இந்திய - சீன எல்லையில் பதற்றம் என்றால், ரஷ்யா - உக்ரைன் மோதல் வலுத்தால் மூன்றாம் உலகம் போரை நெருங்குகிறோமோ என்ற அச்சம் தொற்றிக் கொள்வது இயல்பாகிறது.
சென்னையில் தங்கம் விலை உயர்ந்தால் அதற்கான காரணங்களில் உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றத்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி நகர்ந்து தங்கத்தை தேர்வு செய்வதும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்தால், பெரும்பாலும் சமையல் எண்ணெய்க்கு இறக்குமதியை நம்பியிருப்பதால் உக்ரைன் போரும் ஒருக் காரணம் எனக் கூறப்படுகிறது. உக்ரைனில் இருந்து உணவு தானிய ஏற்றுமதி முடங்கினால் அது ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
போர் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடக்கிறதோ அதை மட்டுமே பெரிதாக பாதித்தது அந்தக் காலம். தொழில்நுட்ப வளர்ச்சி வேகமெடுத்து, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ராக்கெட்டில் மனிதர்களை அனுப்பலாம். 40 நிமிடங்கள்தான் பயணம் என்றளவுக்கு வளர்ச்சிகள் வரிசை கட்டும்போது போரின் தாக்கம் ஆழிப்பேரலை கடலில் தொடங்கி நிலத்தை வாரிசுருட்டிக் கொள்வதைப் போல் உலகம் முழுவதும் அதிர்வலைகளைக் கடத்துகிறது.
போரை விரும்புவது நீங்களா இல்லை நானா?! - 2022 பிப்ரவரி 24 இந்திய நேரப்படி காலை 6 மணி தான் இருக்கும், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கிவிட்டோம் என்று ரஷ்யா அறிவித்தது. அதென்ன ராணுவ நடவடிக்கை என்று யோசித்துக் கொண்டிருக்க `1000 நாட்களைக் கடந்து நிற்கிறது போராக. இதைப் பனிப்போர் என்பதா, உலகப் போர் என்பதா, உலகப் போர்தான், ஆனால் முகமூடிகளோடு நடத்தப்படும் யுத்தம் என்பதா என்று வரையறுக்கவே போர் பற்றி எழுதுவோர் திணறிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
» பாலஸ்தீன ஆதரவாளர்கள் எதிர்ப்பால் ஆஸ்திரேலியா வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து
இந்தச் சூழலில்தான் மத்திய கிழக்கு பதற்றமும், ரஷ்ய - உக்ரைன் உக்கிரமும் கவனத்தை ஈர்க்கிறது. அமெரிக்க ‘வல்லரசு’ போர்களுக்கு ஆயுதம் வழங்குவதும், அதனால் ஏற்படும் சேதங்களுக்கு உச்சு கொட்டுவதும் வரலாறு அறிந்ததே. அண்மையில் நடந்த அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப், “நான் அதிபரானால் உக்ரைன் போர் ஒரே நாளில் முடிவுக்கு வரும்’ என்றார். பதவிக்காலம் முடிவதற்குள் அதிபராக உள்ள ஜோ பைடன், “நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று அனுமதி கொடுத்திருக்கிறார். இது ஏதோ போகிற போக்கில் போட்ட உத்தரவு அல்ல. இந்த உத்தரவு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பைடன் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.
பைடன் உத்தரவுக்கு உடனடி எதிர்வினையாற்றிய ட்ரம்ப்பின் மூத்த மகன், “என் தந்தை அமைதியை உறுதிப்படுத்தும் முன், மூன்றாம் உலகப் போரை உருவாக்க பைடன் அரசு முயற்சி” என்று கூறி ஒரு வேளை முழுவீச்சில் மூன்றாம் உலகப் போர் மூண்டாலும் அந்த ரத்தக் கறைக்கு எங்கள் கைகள் சொந்தமில்லை எனத் தோதாக ஒதுங்கிக் கொள்ளக்கூடும்.
பைடன் அளித்த உத்தரவை எப்படியாவது அணி சேரா அமைப்புக்குள் இணைந்துவிட வேண்டும் என்று காத்திருக்கும் ஜெலன்ஸ்கி ‘மாணவ ஒழுக்கத்தோடு’ ஏற்று ஏவுகணைகளை வீச, இதோ பிரிட்டிஷ், அமெரிக்க ஏவுகணைகளுக்கு பதிலடி என ரஷ்யா முதன்முறையாக ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளது. இது ஏற்கெனவே அதிபர் புதின் விடுத்த எச்சரிக்கை தான். என்ன சற்றே குறைத்து அணு ஆயுதத்தை விடுத்து அனுப்பியுள்ளது ரஷ்யா. இது கடைசி எச்சரிக்கையா, இல்லை அணு ஆயுத தாக்குதலுக்கு முதல் ஒத்திகையா என்று கணிப்பவே அச்சமாக இருக்கும் அளவுக்கு இந்தத் தாக்குதல் இருக்கிறது.
ஏற்கெனவே ரஷ்யாவுக்கு ஆதரவாக களத்தில் ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ வீரர்கள், அதை எதிர்க்கும் அணியாக தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் என அணிகள் தத்தம் தரப்பு பலத்தை வெளிப்படுத்தி வருகின்றன. புகைந்து கொண்டிருக்கும் எரிமலையாக ரஷ்யா - உக்ரைன் போர்க்களம் இருக்க, மத்திய கிழக்கு ரத்தக் களரியாகக் காட்சியளிக்கிறது.
இஸ்ரேல் தாக்குதலால் 45,000-க்கும் அதிகமான உயிர்ப் பலியைக் கண்டு விட்ட காசாவில் இந்த செய்திக் கட்டுரையை எழுதிய நாளில், நேரத்தில் வடக்குப் பகுதியில் பீட் லாஹியாவில் நடந்த தாக்குதலில் 66 பேர் கொல்லப்பட்டனர். காசாவில் ஹமாஸை அழித்தொழிக்கும் வரை போர் ஓயாது. காசாவில் மட்டுமல்ல லெபனானில் இருந்து ஈரானின் ‘கைக்கூலியாக’ செயல்படும் ஹிஸ்புல்லாக்களால் இஸ்ரேல் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ஆரம்பித்து அங்கேயும் வாக்கி டாக்கி, பேஜர் தாக்குதலில் ஆரம்பித்து இப்போது தரைவழித் தாக்குதல் வரை நடந்து கொண்டிருக்கிறது. இதோ இன்றைக்கு (நவ.21) சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதல் நடத்தப்போகிறோம் வடக்கு காசாவில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுங்கள் என்பார்கள். அப்புறம் ஐ.நா. கொடி தாங்கியுள்ள புகலிடங்களில் தாக்குதல் நடத்துவார்கள். தெற்கு லெபனானில் இருப்பவர்கள் உங்கள் பகுதியை தீவிரவாதிகளிடமிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒத்துழைப்பு நல்குங்கள். உடனே வெளியேறுங்கள் என்பார்கள். ஆண்கள் இருக்கட்டும் பெண்கள், குழந்தைகள் தஞ்சம் தேடிப் போகலாம் என அண்டை நாட்டுடன் பேசி அவர்களே (உக்ரைன் அரசே) அனுப்பிவைப்பார்கள். உக்ரைன்வாசிகள் அண்டையில் உள்ள போலந்து, வார்சாவில் தஞ்சம் புகுந்து 1000 நாட்களைக் கடந்து வேரறுந்து கிடக்கிறார்கள். உண்மையில் இந்தப் போரை விரும்புவது இஸ்ரேலியர்களா, பாலஸ்தீனர்களா, உக்ரைன்வாசிகளா, ரஷ்யர்களா? இல்லை அமெரிக்கர்களா? அட வட கொரிய மக்களா? யார் அதை உறுதிப்படுத்திச் சொல்வது.
உக்ரைன் மீது தாக்குதல் வேண்டாம்; அவமானமாக இருக்கிறது என்று உள்நாட்டில் எழுந்த குரல்கள் சீக்கிரமே காணாமல் போயின ஜெலன்ஸ்கியை எதிர்த்த குரல்கள் சன்னமாகக் கூட கேட்கவில்லை. கிம் ஜோங் உன்னை கேள்வி கேட்க யாருமே இல்லை. பெரிய அண்ணன் அமெரிக்காவுக்கு யார் சவால்விட முடியும். போரை நிறுத்துங்கள் என்று ஆங்காங்கே கிளர்ந்தெழுந்த மாணவக் குரல்களும் நீர்த்துப் போயின. போரை விரும்புவது நீங்களோ, நானோ, அவர்களோ அல்ல. தற்போதைய புவி அரசியலில் அது தானாகவே எழும். அதற்கு முந்தைய வரலாற்றுச் சான்றுகள் போல் ஏதும் படுகொலை நிகழ்ந்து காரணமாக இருக்கத் தேவையில்லை. போர்ப் பதற்றத்தை தணிந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் ஒரு போர் உத்தியாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜி-7, ஜி-20, குவாட் ஆசியான், நேட்டோ, பிரிக்ஸ், சார்க், இன்னும் இத்யாதி இத்யாதி உலக நாடுகள் கூட்டமைப்புகளுக்கு பஞ்சமில்லை. அவற்றின் உச்சி மாநாடுகளும் உலகத் தலைவர்கள் அதில் குழுப் படம் எடுத்துக் கொள்வதிலும் எந்தக் குறையுமில்லை. ஆனால் போர்ப் பதற்றங்கள் தணிந்தபாடில்லை. இத்தகைய சூழலில் முழுவீச்சில் மூன்றாம் உலகப் போர் மூண்டால் அது எல்லோரையும் உருக்குலைத்துவிடும்,
ஒரு கரோனோ பெருந்தொற்று உலகை ஸ்தம்பிக்க வைத்தது. ஓர் உலகப் போர் உலகை மயானமாக்கும் என்பதை எல்லா உலகத் தலைவர்களும் புரிந்தே வைத்துள்ளனர். ரஷ்யாவும் - அமெரிக்காவும் பரம விரோதிகள் என்பதால் உக்ரைனுக்கு உதவும் அமெரிக்காவை பழிவாங்க அணு ஆயுதத்தை பயன்படுத்துவது என்பது ரஷ்யாவின் எச்சரிக்கை மணியாகவே தொடர்ந்து முழங்கும் என்ற வல்லுநர்களின் பார்வையையும் தவிர்த்துவிட முடியாததாகவே இருக்கிறது.
அதேவேளையில், ஒரு தாய் பிள்ளைகளே என்று அறியப்படும் வட கொரியா, தென் கொரியா மோதல் சிறு பிள்ளைத்தனமாக குப்பைகள் தாங்கிய பலூன்களை கிம் அனுப்புவதாக மட்டுமே இருந்துவிடாது எந்த வரையறைக்குள்ளும் வராத சமகாலத்தில் சர்வாதிகாரியாக உலா வரும் கிம் நொடிப் பொழுதில் பயங்கர தாக்குதலை முடுக்கிவிடவும் வாய்ப்புள்ளது என்றும் சிலர் கணிக்கின்றனர்.
சர்வதேச நீதிமன்றத்தின் கண்டனம்: போர் என்ற பெயரில் மனிதர்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. போரை நிறுத்துவதில் ஐ.நா.வின் வீச்சு என்ன, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களில் பலம் தான் என்ன? சர்வதேச நீதிமன்ற விசாரணைகளின் தாக்கம் என்னவென்று இதற்கு முந்தைய போர்கள் பல சாட்சி கூறும். இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு எழுந்த கண்டனங்களும், விசாரணைகளும், நிலைப்பாடுகள் நித்திய மவுனத்தோடுதானே கிடக்கின்றன.
உலக போர்ச் சூழலின் போக்கை வைத்து மூன்றாம் உலகப் போர் மூண்டே தீரும் என்று அறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் இதுபோன்ற போர்ச் சூழல்கள் பட்டினியில் இருப்போரை பட்டினிச் சாவுக்கு தள்ளும். அகதிகளை இன்னும் அதிகமாக அலைக்கழிக்கும், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை டாலரும், யூரோவும் கூட எதிர்கொள்ளச் செய்யும். போர் பொருளாதாரத்தால் மட்டுமே வல்லரசாக நீடிக்க முடியாது என்ற படிப்பினையைக் கடத்தும்.
உண்மையில்,போரில் வெற்றி பெற்றால்; அது போரை வென்றதாகாது என்பது மட்டும்தான் உண்மை!
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago