இலங்கையின் புதிய அமைச்சரவையில் 2 தமிழர்கள் பதவியேற்பு

By செய்திப்பிரிவு

இலங்கை: இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய (54) திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சரவையில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமர், புதிய அமைச்சரவையை அதிபர் திசாநாயக்க இன்று அறிவித்தார். அதன்படி, கடந்த செப்டம்பரில் இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூர்ய இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கல்வி, தொழிற்கல்வி, உயர் கல்வி ஆகிய துறைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

அதிபர் அனுர குமார திசாநாயக்க, நிதி, பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளை தனது வசம் வைத்துள்ளார். வெளி விவகார துறை அமைச்சராக விஜித ஹேரத், உள்ளாட்சி மன்ற அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன, நீதித் துறை அமைச்சராக ஹர்சன நாணயக்கார, வேளாண் அமைச்சராக லால் காந்த, வீட்டு வசதி வாரிய துறை அமைச்சராக அனுர கருணாதிலக ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

யார் இந்த ஹரிணி? - இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஹரிணி அமரசூரிய கடந்த 1970-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி கொழும்பில் பிறந்தார். அங்குள்ள பிஷப் கல்லூரியில் அடிப்படை கல்வியை நிறைவு செய்தார். பின்னர் டெல்லி இந்து கல்லூரியில் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவின் மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் பிரிட்டனின் எடின்பர்க் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்தின் குயின் மார்கரெட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இதன்பிறகு இலங்கை திரும்பிய ஹரிணி இலங்கை திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றினார்.

அரசியல் ஆர்வம் காரணமாக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியில் இணைந்த அவர் கடந்த 2011-ம் ஆண்டில் அப்போதைய ராஜபக்ச அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். கடந்த 2020-ம் ஆண்டில் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் எம்பியாக பதவியேற்றார். கடந்த செப்டம்பரில் இடைக்கால பிரதமராகவும் தற்போது நிரந்தர பிரதமராகவும் ஹரிணி பதவியேற்று உள்ளார்.

அமைச்சரவையில் 2 தமிழர்கள்: புதிய அமைச்சரவையில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி மகளிர் நலத் துறை அமைச்சராக மாத்தறையை சேர்ந்த சரோஜா சாவித்திரி போல்ராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல கடல் வளத் துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் இன்று தமிழ் மொழியில் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அதிபர், பிரதமரை சேர்த்து புதிய அமைச்சரவையில் மொத்தம் 22 பேர் இடம்பெற்றுள்ளனர். அமைச்சரவை பதவியேற்பு விழாவில் அதிபர் அனுர குமார திசாநாயக்க பேசும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்து உள்ளனர். இதற்கு மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பொதுமக்களின் எதிர்பார்ப்புகள், கனவுகளை நிறைவேற்றுவதே புதிய அரசின் தலையாய பணியாக இருக்கும்.

தற்போது இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிரிவினை அரசியல் தேவையில்லை என்பதை தேர்தலின் மூலம் மக்கள் நிரூபித்து உள்ளனர். மிக நீண்ட காலமாக வடக்கு பகுதியை தெற்கு பகுதிக்கு எதிரானதாக சித்தரிக்கப்பட்டு வந்தது. இனிமேல் பிரிவினை அரசியலுக்கு இடமில்லை.

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அவர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும். மக்களின் கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அமைச்சர்கள் அயராது பாடுபட வேண்டும். அனைத்து துறைகளிலும் நல்லாட்சி நடைபெற வேண்டும்” என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்