கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிதொட்டே அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 62%-க்கும் அதிகமான வாக்குகளுடன் அறுதிப் பெரும்பான்மையை நோக்கி முன்னேறிவந்த நிலையில் அதன் வெற்றி தற்போது உறுதியாகியுள்ளது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 123 இடங்களை ஆளும் என்பிபி கூட்டணி கைப்பற்றியது. இது அந்நாட்டு தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தமாகப் பார்க்கப்படுகிறது.
ராஜபக்ச கட்சி படுதோல்வி: இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெறும் 2 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வி கண்டுள்ளது. 2019-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 225 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்று மகிந்த ராஜபக்ச பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
உலகளாவிய கரோனா பரவல் காரணமாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி முறைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்தனர். மக்கள் நடத்திய போராட்டங்களினால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பின்னர் ராஜபக்ச குடும்ப செல்வாக்கு கடுமையாக சரிந்தது. அது இப்போது தேர்தலில் எதிரொலித்துள்ளது.
» புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: பழங்குடி பாடல் மூலம் நியூசிலாந்து அவையை அதிரவைத்த இளம் எம்.பி.
» தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளர் ராபர்ட் ஜூனியர் கென்னடியை சுகாதார செயலராக்கிய ட்ரம்ப்
தேர்தல் ஏன்? - இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், கடந்த 75 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்துவரும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணித்தனர். தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி பதவியேற்றார். அவரது என்பிபி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், தேர்தல் நடத்தி பெரும்பான்மை பெறும் நோக்கில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசாநாயக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் 8,821 பேர் போட்டியிட்டனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
திசநாயக்கவின் அசைக்க முடியாத நம்பிக்கை: நேற்று (நவ.14) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அது குறித்து பேட்டியளித்த அனுர குமார திசநாயக்க, ‘தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறுவது உறுதி’ என நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அது இதுபோன்ற வரலாற்று வெற்றியாக அமைந்துள்ளது அந்நாட்டு அரசியல் பார்வையாளர்கள் பலரையும் கூட ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் பல ஆண்டுகளாக குடும்ப ஆட்சியே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில் இடதுசாரியான அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் இந்த மாபெரும் வெற்றி கவனம் பெறுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
24 mins ago
உலகம்
7 hours ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago