மாஸ்கோ: இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் அந்த நாட்டை இணைக்க வேண்டும். இதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 2004-ம் ஆண்டு வால்டாய் விவாத மன்றம் தொடங்கப்பட்டது. இந்த மன்றத்தின் கூட்டம் ரஷ்யாவின் சோச்சி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மேற்கத்திய நாடுகளையோ, ரஷ்ய கூட்டணியில் இல்லாதவர்களையோ எதிரியாக ரஷ்யா கருதவில்லை. எங்கள் கருத்துகளை எந்த நாட்டின் மீதும் திணிக்கவும் முயற்சி செய்யவில்லை. ரஷ்யா சுதந்திரமாக செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகள், உத்தரவுகளால் ரஷ்யாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உலகத்துக்கு ரஷ்யாவின் பங்களிப்பு அவசியம்.
தற்போது உலக அரங்கில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்கள் விருப்பப்படி உலகத்தை மாற்றியமைக்க மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. இதன் காரணமாக யுகோஸ்லாவியா, இராக், லிபியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போது மேற்கத்திய நாடுகளின் தவறான கொள்கைகளால் உக்ரைன், மத்திய கிழக்கில்பதற்றம் நிலவுகிறது. அந்த நாடுகளின் பேராசைகளே யுகோஸ்லாவியா முதல் உக்ரைன் வரையிலான பிரச்சினைகளுக்கு உண்மையான காரணம்.
அதிபர் தேர்தலில் ஆதாயம்: மேற்கத்திய நாடுகளின் சதியால் உக்ரைனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதன் எதிர்விளைவாக, ரஷ்யா தரப்பில் சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உக்ரைனை பகடைக் காயாக பயன்படுத்தி ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அமெரிக்காவின் கைப்பாவையாக உக்ரைன் செயல்படுகிறது. அமெரிக்க தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட ரஷ்யாவின் குர்சுக்பகுதியை அந்நிய படைகள் ஆக்கிரமித்தன. இதன் விளைவாக கடந்த 3 மாதங்களில் மட்டும் 30,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவும், உக்ரைனும் அண்ணன் - தம்பி போன்றவை. மேற்கத்திய நாடுகளின் சதியால் இரு நாடுகளின் உறவில் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அதுவரை உக்ரைனுடன் சுமுக உறவு ஏற்பட வாய்ப்பு இல்லை. டான்பாஸ், நோவோரோசியா பகுதிகளில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, அந்த மக்களின் விருப்பத்தோடு இரு பகுதிகளும் ரஷ்யாவுடன் இணைந்துள்ளன. புதிய எல்லைக் கோட்டை உக்ரைன் அரசு மதித்து நடக்க வேண்டும்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது எட்டப்பட்ட உடன்பாடுகளின்படி அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது.
ட்ரம்புக்கு வாழ்த்து: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்புக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயங்குவது கிடையாது. அந்த வகையில், அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன்.
சீனாவுக்கு எதிரான கூட்டணியில் ரஷ்யா இணைய ட்ரம்ப் அழைப்பு விடுக்கமாட்டார். அதற்கு வாய்ப்பும் இல்லை. ரஷ்யா - சீனா இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இதனால் வேறு எந்த நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாது.
இந்தியா - ரஷ்யா உறவு: சுமார் 150 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு, உலகில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடு, பழமையான கலாச்சாரம், வளமான எதிர்காலம் கொண்ட நாடு என பல்வேறு பெருமையுடன் இந்தியா திகழ்கிறது. இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைக்க வேண்டும். இதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவுடன் அனைத்து துறைகளிலும் இணைந்து ரஷ்யாபணியாற்றி வருகிறது. குறிப்பாக, பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இந்தியாவின் முப்படைகளிலும் ரஷ்ய ஆயுதங்கள், தளவாடங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்தியாவுக்கு நாங்கள் ஆயுதங்கள் விற்பது மட்டுமன்றி, அந்த நாட்டுடன் இணைந்து ஆயுத உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு சிறந்த உதாரணமாக பிரம்மோஸ் ஏவுகணையை குறிப்பிடலாம். தரை, வான், கடல் என மூன்று தளங்களில் இருந்தும் ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்துள்ளோம். இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை தொடர்ந்து விநியோகம் செய்வோம். இந்திய அணு சக்தி துறைக்கு தேவையான உதவிகளை வழங்குவோம்.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம் மிக சிறப்பானது. இந்த திட்டத்தில் ரஷ்யா இணைந்து செயல்படும். இந்திய வேளாண் துறைக்கு தேவையான உரங்களை தொடர்ந்து விநியோகம் செய்வோம்.
இந்தியா - ரஷ்யா இடையே மிக நீண்ட காலமாக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இந்த உறவு வருங்காலத்திலும் நீடிக்கும். இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். இரு நாடுகளை சேர்ந்த சாதுர்யமான தலைவர்கள் இதற்கு உரிய சமரச தீர்வை காண்பார்கள். இவ்வாறு புதின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
3 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago