புதிய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை: அமெரிக்க அதிபர் தேர்தல் களம் எப்படி?

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் இம்மாதம் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதிதாக வெளியான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பின்னடைவு கண்டுள்ளார்.

கடந்த ஜூலை இறுதியில் வெளியான தேர்தல் கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. ட்ரம்பைவிட அவருக்கு கூடுதலாக 3 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர். ஆனால், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அவருக்கான ஆதரவு சற்று குறையத் தொடங்கியது. கடந்த அக்டோபரில் வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கு 44 சதவீதம் பேரும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு 43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். இருவருக்குமான இடைவெளி ஒரு சதவீதமாக இருந்தது.

கடந்த நவம்பர் 1-ம் தேதி 'குக் பொலிடிக்கல் ரிப்போர்ட்' வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 48.6%, ட்ரம்புக்கு 47.7% ஆதரவு கிடைத்தது. நவம்பர் 2-ம் தேதி 'தி ஹில்' நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், கமலாவுக்கு 48.1%, ட்ரம்புக்கு 48.3% வாக்குகள் கிடைத்தன. இந்நிலையில், நேற்று (நவ.2) 538 என்ற அமை்பபு வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 47.9%, ட்ரம்புக்கு 46.9% வாக்குகள் கிடைத்தன. இவை உட்பட புதிதாக வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக கமலா சார்பில் இதுவரை ரூ.6,640 கோடியும் ட்ரம்ப் சார்பில் ரூ.3,000 கோடியும் செலவிடப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

மாகாணங்களில் நிலவரம் என்ன? - அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் அலபாமா, அலாஸ்கா, ஆர்கன்சா, புளோரிடோ, ஜார்ஜியா, ஐடஹோ, இன்டியானா, லோவா, லூசியானா, மிசிசிப்பி, மிசூரி, மொன்ட்டானா, நெப்ராஸ்கா, நெவாடா, நியூ ஹாம்சயர், நார்த் டகோடா, ஓகியோ, ஓக்லகோமா, சவுத் கரோலினா, சவுத் டகோடா, டென்னிசி, டெக்சாஸ், யூட்டா, வெர்மான்ட், வெர்ஜினியா, வெஸ்ட் வெர்ஜினியா, வயோமிங் ஆகிய மாகாணங்களில் குடியரசு கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.

அரிசோனா, கலிபோர்னியா, கொலராடோ, கனெடிகட், டெலவெயர், ஹவாய், இலினொய், கன்சாஸ், கென்டக்கி, மேய்ன், மேரிலேண்ட், மாசச்சூசெட்ஸ், மிச்சிகன், மினசோட்டா, நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க், நார்த் கரோலினா, ஓரிகன், பென்சில்வேனியா, ரோட் தீவு, வாஷிங்டன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவேடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதிபர் தேர்தலின்போது இந்த 7 மாகாணங்களின் மக்கள் ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் ஆதரவாக வாக்களிக்கின்றனர்.

எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் 7 மாகாணங்களின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. நவம்பர் 5-ம் தேதி (இந்திய நேரப்படி நவ.6) நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த மாகாணங்களின் தீர்ப்பின் அடிப்படையில் அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரச்சாரம்: ட்ரம்பின் Vs கமலா எப்படி? - தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் அரசியல் நாகரிக வரம்புகளை அப்பட்டமாக மீறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாவின் பெயரை மோசமாக விமர்சித்தார். இதெல்லாம் ஒரு பெயரா, இந்த பெயரை உச்சரிக்க முடியுமா என்று கிண்டல் செய்தார். அவர் இந்தியரா, ஆப்பிரிக்கரா என்று கேள்வி எழுப்பினார். கமலாவின் கணவர் டக்ளஸை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்.

ஆரம்ப காலத்தில் பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றியதாக கமலா தனது பிரச்சாரத்தில் கூறினார். இதை கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்ட ஓட்டலில் சர்வராக நடித்த ட்ரம்ப், அங்கு இந்தியர் ஒருவருக்கு உணவு வகைகளை விநியோகம் செய்து தரக்குறைவான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

“கமலாவுக்கு அறிவு கிடையாது, அவர் சோம்பேறி. அமெரிக்க அதிபராக அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. அவருக்கு எதிராக வாக்களியுங்கள். அப்போதுதான் அமெரிக்காவை காப்பாற்ற முடியும்” என்று அதிபர் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தில் தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் வெள்ளையினவாதத்தை தூண்டும் வகையில் பேசுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

“முன்னாள் அதிபர் ட்ரம்ப் சர்வாதிகாரி, நாஜி சிந்தனை கொண்டவர், மனித உரிமைகளை மீறுபவர், பெண் உரிமைகளை மதிக்காதவர், பலவீனமானவர்” என்று கமலா ஹாரிஸ் தனது பிரச்சாரங்களில் குற்றம் சாட்டி வருகிறார்.

மேலும் பொருளாதார வளர்ச்சி, வரி சீர்திருத்தம், கருக்கலைப்புக்கு ஆதரவு, எல்லை பாதுகாப்புக்கு முன்னுரிமை, உக்ரைனுக்கு ஆதரவு, இஸ்ரேல்- காசா பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகள் கொள்கை, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடு விரிவாக்கம், குற்றங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கமலா பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். இவை அவருக்கான ஆதரவை பெருகச் செய்துள்ளது கவனிக்கத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்