ஸ்பெயின் கனமழை - வெள்ளம்: 150+ உயிரிழப்புகள் முதல் திணறும் மீட்புக் குழுவினர் வரை!

By செய்திப்பிரிவு

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக 158 பேர் உயிரிழந்தனர். கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தங்கள் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். அந்த அளவுக்கு வரலாறு காணாத மழை சேதம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் அவலநிலை அங்கு நிலவுகிறது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கைப் பேரிடர் பாதிப்புகளில் இது ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (அக்.31) அன்று வெள்ள பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தேடிய சோகம் காண்பவர்களின் மனங்களை கலங்கச் செய்தது.

கடந்த செவ்வாய்கிழமை பின்னிரவு மற்றும் புதன்கிழமை அன்று ஸ்பெயினில் கனமழை பொழிந்தது. முன்னதாக, அந்த நாட்டின் உயல்வா கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வானிலை மையம் சார்பில் கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அன்று அங்கு பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 158 பேர் உயிரிழந்தனர். வலேன்சியாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் எண்ணில் அடங்கா மக்கள் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

கிழக்கு வலேன்சியாவின் வீதிகளில் சாய்ந்த மின் கம்பங்கள், வேரோடு சாய்ந்த மரங்கள், சேரும் சகதியுமான வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றான மீது ஒன்றாக நிற்கும் கார்கள் என்ற சூழல் நிலவுகிறது. அங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மின்சாரம், உணவு போன்ற அடிப்படை தேவைகளும் முறையாக கிடைக்கப்பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சுமார் 40,000 மக்கள் மின்சார வசதி இல்லாமல் உள்ளனர் என்ற நிகழ் நேர தகவல் அங்கிருந்து கிடைத்துள்ளது. கடந்த அக்.18 மற்றும் 31 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் மேப்பின் படங்கள் வெள்ளம் ஏற்படுத்தியுள்ள சேதத்தை அப்படியே தெளிவாக விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வலேன்சியாவில் மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை சேவைகளை மீட்டெடுக்கவே மீட்புக் குழுவினர் போராடி வருவதாக ஸ்பெயின் நாட்டு செய்தி நிறுவனம் ‘எல் பைஸ்’ தெரிவித்துள்ளது. இதனிடையே தன்னார்வ குழுவினரும் தங்களால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் சேரும் சகதியுமான வீதிகளை சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர். இதனிடையே அங்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வலேன்சியா அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின் அவசரகால அலர்ட் சிஸ்டம் குறித்த கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை இதற்கு காரணமாக விஞ்ஞானிகள் சொல்லி வருகின்றனர். பலர் மாயமாகி உள்ள காரணத்தால் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அரசு அதிகாரிகள் வசம் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

“மக்களுக்கு போதுமான முன்னெச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. கார்களில் இருந்தவர்கள் வெளிவருவதற்குள் வெள்ளம் அவர்களை சூழ்ந்தது. அந்த அளவுக்கு வேகமாக இந்த பாதிப்பு நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த மக்கள் வெளியேற கூட நேரம் இல்லை” என பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வந்த மிரா தெரிவித்துள்ளார்.

சுமார் 2 முதல் 3 மணி நேர கனமழைக்கு பிறகே வெள்ள எச்சரிக்கை மக்களுக்கு கிடைத்துள்ளது. அதற்குள் அந்தப் பகுதி பாதி அளவு நீரால் சூழப்பட்டது என உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். வியாழன் (அக்.31) மட்டும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 20 மாதங்களில் வலேன்சியாவின் ஷிவா நகரில் பதிவான மழையின் அளவை காட்டிலும் அங்கு வெறும் 8 மணி நேரத்தில் மழை அதிகம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் விளை நிலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டறிவதே எங்களது முதல் பணி. அதன் மூலம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு நாங்கள் உதவ முடியும் என நம்புகிறோம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மழை எச்சரிக்கைக்கு மத்தியில் மீட்பு படையினரும் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். இயந்திரங்களை கொண்டும் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

மேலும்