பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியால், உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும் என்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக கடந்த ஜூலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் கடந்த ஆகஸ்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் அவர் சந்தித்து பேசினார். இதன்தொடர்ச்சியாக கடந்த 22, 23-ம் தேதிகளில் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, “ரஷ்யா, உக்ரைன் இடையிலான பிரச்சினைக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது" என்று உறுதி அளித்தார்.

இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புகளை இந்தியா பெற்றிருக்கிறது. சர்வதேச அரசியலில் அந்த நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும். இதுதொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

ரஷ்யா அத்துமீறி செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவின் அத்துமீறல்களால் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து இருந்தாலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். வேறு வழியின்றி ரஷ்ய அதிபர் புதின் போரை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்.

அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் மூலம் உலக நாடுகளை இரண்டாகப் பிரிக்க புதின் தீவிர முயற்சி மேற்கொண்டார். அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கவில்லை. பிரிக்ஸ் அமைப்பில் இணைய சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை பிரிக்ஸ் மாநாடு தோல்வியில் முடிந்துள்ளது. சில நாடுகள் நடுநிலையை கடைப்பிடிப்பதாக கூறுகின்றன. நடுநிலை என்றால் ரஷ்யாவை ஆதரிப்பதாகவே அர்த்தமாகும்.

உக்ரைனை சேர்ந்த 1,000 சிறாரை ரஷ்ய ராணுவம் சிறைபிடித்து தங்கள் நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளது. அவர்களை மீட்க பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும். உக்ரைனில் குளிர்காலம் தொடங்க உள்ளது. இந்த நேரத்தில் உக்ரைனின் மின் நிலையங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மின் நிலையங்களை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஐரோப்பிய நாடுகளால் மட்டுமே ரஷ்யாவை எதிர்க்க முடியும். இந்த இக்கட்டான சூழலில் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த நாட்டின் புதிய அதிபர், உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறோம். அமெரிக்காவின் கொள்கை மாறினால் உக்ரைனுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இவ்வாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால் உக்ரைனுக்கான ஆயுத, நிதியுதவியை நிறுத்திவிடுவேன் என்று ட்ரம்ப் கூறி வருகிறார். இதன்காரணமாக உக்ரைனில் குழப்பமான சூழல் காணப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்