புதுடெல்லி: ஈரானின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
ஈரானின் பாதுகாப்பு நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. 20 நிலைகளைக் குறிவைத்து பல மணிநேரம் தாக்குதல் நடத்தியதில், ஈரான் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை ஈரான் உறுதி செய்தது. எனினும், தங்கள் ராணுவ நிலைகளில் பெரிதாக சேதம் இல்லை என்றே ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம், ‘ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தினால். அதற்கு பதிலளிக்க இஸ்ரேல் கடமைப்பட்டிருக்கும்’ என்று கூறியது. அதேவேளையில், இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்கிற ரீதியில் ஈரான் ‘ரியாக்ட்’ செய்துள்ளது. ஈரான் மீதான இஸ்ரேஸ் தாக்குதல் மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு நாடுகள் வெளியிட்ட கருத்துகள்:
கத்தார்: கத்தார் நாட்டின் வெளியுறுவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் தாக்குதல் அப்பட்டமாக ஈரானின் இறையாண்மையை மீறும் செயல் மற்றும் சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறும் செயல். இந்தப் புதிய தாக்குதலின் பின்விளைவுகள் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் கட்டுப்பாடுகளை கடைபிடித்து, பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். பிராந்தியத்தின் அமைதியான வழிமுறை மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் எந்தவொரு விஷயத்தையும் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா: சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராணுவ நிலைகளை குறிவைத்துள்ள இஸ்ரேலின் தாக்குதல் ஈரானின் இறையான்மை மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். அனைத்து தரப்பினரும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். தாக்குதல்களின் விரிவாக்கத்தை தவிர்க்க வேண்டும். பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதையும், இங்குள்ள நாடுகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் மோதல்களை நிராகரிப்பதில் சவுதி அரேபியா உறுதியாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
» இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ‘உரிய’ பதிலடி - ஈரான் எச்சரிக்கை
» ஈரான் மீதான தாக்குதலை முடித்துவிட்டோம் - இஸ்ரேல் அறிவிப்பு
ஈராக்: ஈராக் அரசின் செய்தித் தொடர்பாளர் பாசிம் அலவாடி கூறுகையில், "ஆக்கிரமிப்பு சியோனிச அமைப்பு அதன் ஆக்கிரமிப்பு கொள்கைகளைத் தொடர்கிறது. ஈரானிய இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்கள் மூலம் பிராந்தியத்தில் மோதல்களை விரிவுபடுத்துகிறது. அதனைத் தண்டனையின்றிச் செய்கிறது. இஸ்ரேலின் நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்க்கும் உலக நாடுகளின் மவுனம் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈராக் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காசா மற்றும் லெபனானில் போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் ஈராக் வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளது.
ஹமாஸ்: “ஈரானுக்கு எதிரான சியோனிச ஆக்கிரமிப்பை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது. மேலும் "இது ஈரானின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட அப்பட்டமான தாக்குதல். பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் பாதுகாப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றே நாங்கள் கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து: “இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கக் கூடாது” என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், "ஈரானின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதேநேரத்தில் பிராந்தியத்தில் மோதல்கள் மேலும் விரிவடைந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். ஈரான் பதிலடி கொடுக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்: இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு எதிரான தாக்குதலே. இது ஐ.நா. பாதுகாப்பு சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்" என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், “இந்தத் தாக்குதல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பாதையை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. ஏற்கெனவே கொந்தளிப்பான பிராந்தியத்தில் ஆபத்தினை விரிவாக்குகிறது. பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் சுழற்சியான மோதல் மற்றும் விரிவாக்கத்துக்கு இஸ்ரேலே முழு பொறுப்பேற்க வேண்டும்" என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம்: ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலை கண்டித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான தொடர்ச்சியான மோதல் விரிவாக்கம் மற்றும் அதன் தாக்கம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளது.
ஓமன்: “இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ஈரானின் இறையாண்மை மீதான அப்பட்டமான தாக்குதல். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் வன்முறை சுழற்சிக்கு வித்திடுவதுடன், பதற்றத்தைக் குறைக்கும் முயற்சியை குறைக்கவும் செய்கிறது” என்று ஓமன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், "ஆக்கிரமிப்புகளை நிறுவத்துவதற்கும் அண்டை நாடுகளின் பிராந்தியங்களில் அத்துமீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச சமூகம் மீண்டும் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளது.
மலேசியா: மலேசிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேலின் தாக்குதல் அப்பட்டமான சர்வதேச சட்ட மீறல். மேலும், இது பிராந்தியத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. விரோதங்களை முடிவுக்கு கொண்டு வரவும் வன்முறையின் சுழற்சியை நிறுத்தவும் மலேசியா அழைப்பு விடுக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா: அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் கூறுகையில், "இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஈரானை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதன்மூலம் இந்த வன்முறையின் சுழற்சி மேலும் தொடராமல் முடிவுக்கு வரும்" என்று தெரிவித்துள்ளார்.
பின்புலம் என்ன? - காசாவில் ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் லெபானான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்களை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேல் மீது கடந்த 1-ம் தேதி 180-க்கும் மேற்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசியது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில், ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தற்போது நடத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
40 mins ago
உலகம்
3 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago