“21-ம் நூற்றாண்டு ஆசிய நாடுகளுக்கானது” - ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

வியன்டியான்: 21ம் நூற்றாண்டு ஆசிய நாடுகளுக்கானது என ஆசியான் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு லாவோசின் வியன்டியானில் இன்று (அக்.10) நடைபெற்றது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் பத்தாண்டுகளைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, ஆசியான் தலைவர்களுடன் இணைந்து ஆசியான் - இந்தியா விரிவான உத்திசார் கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும், ஒத்துழைப்புக்கான எதிர்கால திசையை வகுக்கவும் உள்ளார். இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது இது 11-வது முறையாகும்.

மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, "ஆசியான் ஒற்றுமை, ஆசியான் மையத்தன்மை மற்றும் இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றிற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. 21ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. ஆசியாவின் எதிர்காலத்தை வழிநடத்துவதில் இந்தியா-ஆசியான் உறவுகள் முக்கியமானவை.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா-ஆசியான் வர்த்தகம் இரட்டிப்பாகி 130 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. ஆசியான் இன்று இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் முதலீட்டு பங்குதாரராக உள்ளது. ஏழு ஆசியான் நாடுகளுடன் நேரடி விமான இணைப்பு நிறுவப்பட்டுள்ளது. பிராந்தியத்துடன் நிதி நுட்ப ஒத்துழைப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஐந்து ஆசியான் நாடுகளில் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆசியான் – இந்தியா சமூகத்தின் நலனுக்காக அதிகப் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்தும் வகையில், ஆசியான் – இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மறுஆய்வைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியது மிகவும் முக்கியம். நாளந்தா பல்கலைக்கழகத்தில் ஆசியான் இளைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதன் மூலம் இந்தியா-ஆசியான் அறிவுசார் கூட்டாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், இந்தியா - ஆசியான் இணைப்பு மற்றும் மீள்திறனை மேம்படுத்துதல் நோக்கங்களுக்காக பிரதமர் மோடி 10 அம்சத் திட்டத்தை அறிவித்தார்.

10 அம்சங்கள் வருமாறு: 1. 2025-ம் ஆண்டை ஆசியான் – இந்தியா சுற்றுலா ஆண்டாக கொண்டாடுவதற்கான கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் அளிக்கும். இளைஞர் உச்சிமாநாடு, தொழில் தொடங்கும் விழா, ஹேக்கத்தான், இசை விழா, ஆசியான் – இந்தியா சிந்தனைக் குழாம்கள் வலையமைப்பு மற்றும் டெல்லி பேச்சுவார்த்தை உள்ளிட்ட மக்களை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் மூலம் கிழக்கு நோக்கிய கொள்கையின் பத்தாண்டுகள் கொண்டாடப்படும்.

2. ஆசியான் – இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின் கீழ் ஆசியான் – இந்தியா பெண் விஞ்ஞானிகள் மாநா ஏற்பாடு செய்யப்படும். 3. நாளந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கப்படும். 4. இந்தியாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில் ஆசியான் மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 5. 2025-க்குள் ஆசியான் – இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும். 6. பேரிடர் தாங்கும் திறனை மேம்படுத்த இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கும். 7. சுகாதார மீள்திறனை கட்டியெழுப்புவதற்கான சுகாதார அமைச்சர்களின் புதிய வழி தொடங்கப்படும்.

8. டிஜிட்டல் மற்றும் இணைய விரிதிறனை வலுப்படுத்த ஆசியான் – இந்தியா இணைய கொள்கை பேச்சுவார்த்தையின் வழக்கமான வழிமுறை தொடங்கப்படும். 9. பசுமை ஹைட்ரஜன் குறித்த பயிலரங்கம் நடத்தப்படும். 10. பருவநிலை விரிதிறனை உருவாக்குவதற்கான 'தாயின் பெயரில் ஒரு மரம் நடும்' பிரச்சாரத்தில் சேர ஆசியான் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இந்த உச்சிமாநாட்டில், ஆசியான் – இந்தியா பங்களிப்பின் முழு திறனை உணர்ந்து கொள்வதில் இருதரப்புக்கும் வழிகாட்டும் புதிய ஆசியான் – இந்தியா செயல் திட்டத்தை (2026-2030) உருவாக்க தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.

21-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும், அன்பான விருந்தோம்பலுக்காகவும் லாவோஸ் பிரதமருக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கியதற்கு சிங்கப்பூருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியாவின் புதிய ஒருங்கிணைப்பாளரான பிலிப்பைன்ஸுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

மேலும்