பெய்ரூட்: கடந்த இரு வார காலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில், லெபனானில் இதுவரை 127 குழந்தைகள், 261 பெண்கள் உள்பட 2,000-க்கும் மேற்போட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது, லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருப்பது போர்ப் பதற்றத்தை மேலும் கூட்டியுள்ளது.
இஸ்ரேல் - காசா போர் இப்போது ஒரு வருடத்தை நெருங்குகிறது. இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கு லெபனானில் உள்ள பெடாவி முகாம் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ அதிகாரி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கொல்லப்பட்டனர். வெஸ்ட் பேங்கில் உள்ள அகதிகள் முகாம் மீது வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியதில் 18 பேர் கொல்லப்பட்டனர். இதில் முக்கியத் தளபதியும் உயிரிழந்ததாக ஹமாஸ் கூறுகிறது.
நாடு முழுவதும் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல்களில் 127 குழந்தைகள், 261 பெண்கள் உள்பட இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், தெஹ்ரானின் ‘பதிலடி முந்தையதை விட வலுவாக இருக்கும்’ என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi) இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க 2,00,000-க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் எல்லையைக் கடந்து சிரியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்று அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. லெபனான் மீதான தரைவழி தாக்குதலை விரிவுபடுத்த முயன்ற இஸ்ரேலியப் படைகள் மீது ஹெஸ்புல்லா இன்று பல்முனை தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளது. ஹிஸ்புல்லா நேரடியாக இஸ்ரேலிய டாங்கியை தாக்கியதாக கூறுகிறது.
» ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் ‘சர்ஃபிரா’ அக்.11-ல் ஓடிடியில் ரிலீஸ்!
» கோவை முதல் தேனி வரை: தமிழகத்தில் பரவலாக 6 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
காசா போர்: கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காசாவில் போர் தொடங்கிய நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. காசா போர் நிறுத்தத்துக்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது வரை காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 41,825 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 96,910 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்ட மக்கள் சிறைபிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முக்கிய ஆலோசனை: இஸ்ரேல் - ஈரான் இடையே நேரடி போர் மூளும் அபாயம் எழுந்திருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய பிறகு மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த நெருக்கடியில் இருந்து எழும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ஆயில், பெட்ரோலியம் உள்ளிட்ட தயாரிப்புகளின் விநியோக சங்கிலியில் ஏற்படும் தாக்கம் தொடர்பான முக்கியமான பிரச்சினை மற்றும்அதனால் ஏற்படும் விளைவுகள்குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் தங்களது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago