லெபனான் மீது இஸ்ரேல் தீவிரத் தாக்குதல்: 37 பேர் பலி, 150+ காயம் - நடப்பது என்ன?

By செய்திப்பிரிவு

டெல் அவில்: லெபனான் தலைநகரான பெய்ரூட், காசா மற்றும் வெஸ்ட் பேங்கில் கொடூரத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும், 151 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள துல்கரேம் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ஜெட் போர் விமானம் நடத்திய தாக்குதலில் 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு நாட்களில் காசா பகுதியில் உள்ள ஐ.நா. அமைப்பால் நடத்தப்படும் மூன்று பள்ளிகளை இஸ்ரேலியப் படைகள் தாக்கப்பட்டதில் 21 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சி தெரிவித்துள்ளது.

லெபனான் தலைநகரான பெய்ரூட், காசா மற்றும் வெஸ்ட் பேங்கில் கொடூரத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும், 151 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையெ, இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில், கடந்த ஆறு வாரங்களில் 690 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என யுனிசெப் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் லெபனானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேலிய தாக்குதலை “விதி மீறல் செயல்" என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

லெபனானில் உள்ள 20 தெற்கு நகரங்களில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும், லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படையினரை எல்லையில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்குவதற்கு அனுமதி கோரி இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக உலக சுகாதார அமைப்பால் (WHO) திரட்டப்பட்ட மருத்துவப் பொருட்கள் பெய்ரூட்டை வந்தடைந்தன. அதைத் தொடர்ந்து, நாளையும் இரண்டு விமானங்கள் மூலம் பொருட்கள் வந்து சேரும்.

அயதுல்லா அலி காமெனி உரை: இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்குப் பிறகுப் ஈரான் உயர் தலைவரும், இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி காமனி, ஈரானிய மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “பிரிவினை என்ற விதையை விதைத்து, அனைத்து முஸ்லிம்களுக்கும் இடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதுதான் நமது எதிரியின் முதல் வேலை. ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது. இந்த பிராந்தியத்தில் இருந்து மேற்கு நாடுகளுக்கு எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கான நுழைவாயிலாக இஸ்ரேலை மாற்றும் நோக்கிலேயே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அதற்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றன. ஆனால், நமது பிராந்தியத்தின் எதிர்ப்பு சக்தி, இஸ்ரேலுக்கு எதிராக பின்வாங்காது.

அனைத்து முஸ்லிம் நாடுகளும் பாதுகாப்புக்காக ஒன்றுபட வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து ஏமன் வரை, ஈரானில் இருந்து காசா மற்றும் லெபனான் வரை முஸ்லிம் நாடுகள் தற்காப்புக்காக தயாராக வேண்டும். இஸ்ரேலை எதிர்கொள்வதில் ஈரான் தாமதம் செய்யாது அவர்கள் பாலஸ்தீனர்களுக்கும், லெபனானியர்களுக்கும், எகிப்தியர்களுக்கும், ஈரானியர்களுக்கும், ஏமன் மற்றும் சிரியா நாட்டின் மக்களுக்கும் எதிரிகள்தான். ஒவ்வொரு நாட்டிற்கும், அதில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் இறுதி கொடுங்கோன்மைக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது” என்று அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

பின்புலம்: பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தீவிரவாத குழுக்களும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த 27-ம் தேதி இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல, ஏமன் நாட்டின் ஹவுத்தி தீவிரவாதிகள், இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை,ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஏமன் நாட்டின் துறைமுகங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியாவின் ஷியா பிரிவை சேர்ந்த பல்வேறு தீவிரவாத குழுக்களும் இஸ்ரேலை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த குழுக்களுக்கு சிரியா அதிபர் ஆசாத், ஈரான் ராணுவம் முழு ஆதரவு அளிக்கிறது. இந்நிலையில், லெபனான், காசா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், ஹமாஸ் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் மிகப் பெரிய தாக்குதல் - கடந்த 2-ம் தேதி இரவு இஸ்ரேலின் டெல்அவிவ் மற்றும் விமானப் படை தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் 180 ஏவுகணைகளை வீசியது. அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது. ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இதன்படி, ஈரானின் 6 நகரங்களில் உள்ள அணு உலைகள், எண்ணெய் கிணறுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்திய நிலையில், ஈரானின் எண்ணெய் கிணறுகள், மின் விநியோக கட்டமைப்புகளை குறிவைத்து விரைவில் மிக பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. | வாசிக்க > ஈரான் Vs இஸ்ரேல்: ராணுவக் கட்டமைப்பு, ஆயுதங்கள், ஆதரவு பலம் அதிகம் யாருக்கு?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

2 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

மேலும்