ஜெருசலேம்: இஸ்ரேல் - ஹமாஸ், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதலுக்கு மத்தியில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால், மத்தியக் கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பரம எதிரிகளான ஈரானும், இஸ்ரேலும் போரின்போது தங்களை எப்படி தற்காத்துக் கொள்கிறார்கள், அவர்களின் ராணுவக் கட்டமைப்பு, ஆயுதங்கள், ஆதரவு பலம் குறித்து காணலாம்.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் துவங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுப்பதால், மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரான் செவ்வாய்கிழமை அன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் 180 ஏவுகணைகளை ஏவி சரமாரித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதல் என்றே சொல்லப்படுகிறது. இதைக் கண்டு பொங்கி எழுந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
இந்நிலையில், காசாவில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நள்ளிரவில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈரான் விளக்கமளித்தது. இந்த ஏவுகணைகள், குறிப்பாக டெல் அவிவில் உள்ள மூன்று ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கியதாக ஐஆர்ஜிசி (Iran’s Islamic Revolutionary Guard Corps -IRGC) தெரிவித்தது. அந்நாடு முதன்முறையாக ஃபத்தா ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் (Fatah hypersonic ballistic missiles) பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்தத் தாக்குதலுக்கான பின்விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும். இதற்கான பதிலடி சரியான நேரத்தில் சரியான இடத்தில் கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது. மேலும், ஏவுகணைகள் பலவற்றை இஸ்ரேல் விமானப் படை வழியிலேயே தாக்கி அழித்ததாகவும் தெரிவித்தது. இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.
மேலும், இதற்கான பதிலடி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசிக்க இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இஸ்ரேலுக்கு உண்டு என்றும் பைடன் உறுதியாக கூறினார். தரைவழி, வான்வழி தாக்குதலைத் தொடர்ந்து, எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட முடியும் என்று இஸ்ரேல் நம்புவதாக கூறப்படுகிறது. பரம எதிரிகளான ஈரானும், இஸ்ரேலும் போரின்போது தங்களை எப்படி தற்காத்துக் கொள்கிறார்கள், அவர்களின் ராணுவ கட்டமைப்பு, ஆயுத பலம் என்ன?
வீரர்களின் எண்ணிக்கை: ஐ.ஐ.எஸ்.எஸ் (IISS) எனப்படும் சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (International Institute for Strategic Studies - IISS) ராணுவ திறன்களை ஒப்பிடுவதில் துல்லியமான ஆராய்ச்சி நிறுவனமாகக் கருதப்படுகிறது. ஈரானிடம் இஸ்ரேலை காட்டிலும் 6 மடங்கு அதிக படை வீரர்கள் உள்ளனர். ஈரானிடம் 6 லட்சம் படைவீரர்கள் உள்ளனர். அதில், 3,50,000 ராணுவ வீரர்களும், 1,90,000 வீரர்கள் ஐ.ஆர்.ஜி.சியிலும், 18,000 வீரர்கள் கடற்படையிலும், 37,000 வீரர்கள் விமானப் படையிலும், வான் பாதுகாப்பில் 15,000 பேரும் உள்ளனர். இஸ்ரேலிடம் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் படை வீரர்கள் உள்ளனர். அதில், ராணுவத்தில் 1,26,000 வீரர்களும், கடற்படையில் 9,500 வீரர்களும், விமானப் படையில் 34,000 வீரர்களும், 4,65,000 ரிசர்வ் ராணுவ (reserve army) வீரர்களும் உள்ளனர்.
170-க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவப் படைகள், வீரர்களின் எண்ணிக்கை, உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடும் The Military Balance 2023-ன் தரவுகளின்படி, தரைப் படையில் தாக்குதல் (Ground forces) நடத்தும் வலிமையைப் பொறுத்தவரை ஈரானிடம் 10,513 போர் டாங்கிகள், 6,700-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளால் தாக்க முடியாத வரம்புகளையும் தாண்டி அழிக்கும் கனரக ராணுவ ஆயுதங்கள் உள்ளன. மேலும், ஈரான் ராணுவத்திடம் 50 ஹெலிகாப்டர்களும், ஐஆர்ஜிசியிடம் 5 ஹெலிகாப்டர்களும் உள்ளன. இஸ்ரேலிடம் சுமார் 400 போர் டாங்கிகள், 530 பீரங்கி துப்பாக்கிகள் உள்ளன.
ஈரானுக்கு ஆதரவாக பல குழுக்கள் அண்டை நாடுகளில் இயங்கி வருகின்றன. லெபனானில் ஹிஸ்புல்லா, இதுதவிர, ஹமாஸ் உள்ளிட்ட குழுக்களும் உள்ளன. ஹமாஸின் வாழ்நாள் இலக்கே இஸ்ரேலை அழிப்பது மட்டும்தான். இந்த ஆயுதக் குழுக்களுக்கு பல மில்லியன் டாலர்கள் நிதியுதவிகளும் வழங்கப்படுகின்றன. இவற்றுக்குப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதேபோல் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனைத்து வழிகளிலும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
விமானப் படை: ஈரான் விமானப் படையிடம் 312 போர் திறன் கொண்ட விமானங்களும், ஐஆர்ஜிசியிடம் மேலும் 23 விமானங்களும் உள்ளன. விமானப் படையிடம் இலக்கை குறி வைத்து தாக்குல் நடத்தும் இரண்டு தாக்குதல் ஹெலிகாப்டர்கள் (attack helicopters) உள்ளன. அதோடு, ஈரான் ராணுவத்திடம் 50 மற்றும் ஐஆர்ஜிசியிடம் ஐந்து ஹெலிகாப்டர்கள் உள்ளன. இஸ்ரேலிடம் 345 போர் திறன் கொண்ட விமானங்களும், இலக்கை குறி வைத்து தாக்குல் நடத்தும் 43 தாக்குதல் ஹெலிகாப்டர்களும் உள்ளன.
கடற்படை: ஈரானிடம் 17 தந்திரோபாய நீர்மூழ்கிக் கப்பல்கள், 68 ரோந்து மற்றும் கடலோர ராணுவப் பணியாளர்கள், ஏழு கொர்வெட்டுகள்( சிறிய போர்க்கப்பல்), 12 தரையிறங்கும் கப்பல்கள் உள்ளிட்டவை உள்ளன. இஸ்ரேலிடம் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 49 ரோந்து மற்றும் கடலோர ராணுவப் பணியாளர்கள் உள்ளனர்.
வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defence systems): இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பாக, அதன் ‘அயர்ன் டோம்’, ‘ஏரோ’ அமைப்புகள் மற்றும் டேவிட் ஸ்லிங் ஆகியவை இருக்கின்றன. சுமார் 10 கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் குறுகிய தூர ராக்கெட்டுகளை அயர்ன் டோம் இடைமறித்துவிடும் சக்தி வாய்ந்தது. டேவிட் ஸ்லிங் அமைப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் சேர்ந்து உருவாக்கப்பட்டது. இதைக் கொண்டு இடைதூர மற்றும் நீண்டதூர ராக்கெட்டுகள் பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணைகளை இடைமறிக்க முடியும் எனச் சொல்லப்படுகிறது. சுமார் 100 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடிய தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏரோ அமைப்பு தடுக்கும் வல்லமை கொண்டது. ஈரான் குறுகிய மற்றும் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உருவாக்கியுள்ளது.
ஈரானிடம் பல்வேறு வகையான ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. ஈரானின் ஆயுதக்கூடத்தில் குறைந்தது 12 வகையான பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இஸ்ரேலிடம் குறைந்தபட்சம் நான்கு வெவ்வேறு வகையான ஏவுகணைகள் உள்ளன. இஸ்ரேலின் கையிருப்பில் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக தெரியவில்லை, ஆனால் அது ஒரு மேம்பட்ட அணுசக்தி திட்டத்தைக் கொண்டுள்ளது.
இஸ்ரேலை விட ஈரான் அதிக ஆயுதங்கள், படை வீரர்களை கொண்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இஸ்ரேலிடம் நவீன தொழில்நுட்பங்கள் உள்ளதாகவே அறியப்படுகிறது. அதோடு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு இஸ்ரேலுக்கு உறுதியாக உள்ளது. ஈரானுக்கு ஆதரவாக லெபனான், ஏமன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
56 mins ago
உலகம்
14 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago