லெபனானில் இதுவரை 1,000+ பலி: இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என ஹிஸ்புல்லா உறுதி

By செய்திப்பிரிவு

பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். 2006-இல் இஸ்ரேலுடனான மோதலில் நாங்கள் வென்றது போல், இம்முறையும் வெற்றி பெறுவோம் என்று ஹிஸ்புல்லா இயக்கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஒரு வார காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை லெபனானில் 87 குழந்தைகள், 156 பெண்கள் உள்பட 1030 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் நாடு முழுவதும் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் நிலைமை குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் அவசர பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழியாகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. லெபனானின் சுகாதார அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 105 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும், பலர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரானின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிரடியாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இத்தகைய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, “இதுபோன்ற செயல்களை ரஷ்யா கண்டிக்கிறது. இவை பிராந்தியத்தில் மோசமான விளைவுகளை (போர் ஆபத்துகளை) ஏற்படுத்தும். முக்கியமான விஷயம் என்னவென்றால், லெபனானில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தும் இத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல் ஏராளமான மனித உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது. இது தவிர்க்க முடியாத, காசாவில் நாம் காணும் மனிதாபிமான பேரழிவைக் கொண்டுவரும்” என்று எச்சரித்துள்ளது.

இந்த மாதம் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்ததில் இருந்து, லெபனானில் இருந்து 1,00,000-க்கும் மேற்பட்ட லெபனான் குடிமக்கள் சிரியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்று ஐ.நா அகதிகள் அமைப்பு (UNCHR) தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர் ஒருவர் பேசும்போது, “அன்பானவர்களை இழந்துள்ளோம். அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேலியப் படைகள் பொதுமக்களுக்கு எதிராக படுகொலைகளை செய்து வருகின்றன. இஸ்ரேலிய எல்லைக்குள் சென்று 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்ரேலிய இலக்குகளை ஹிஸ்புல்லா தாக்கியுள்ளது. நஸ்ரல்லா கொல்லப்பட்டதில் இருந்து ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகள் அதே வேகத்தில் தொடர்கிறது.

லெபனான் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இஸ்ரேலுடன் ஒரு நீண்ட போரை நிகழ்த்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நஸ்ரல்லா முன்வைத்த மாற்றுத் திட்டங்களை இக்குழு பின்பற்றுகிறது. காசாவை ஆதரிப்பது மற்றும் லெபனானைப் பாதுகாப்பது என்ற முக்கிய இலக்குகளுடன் நாங்கள் போரிடுவோம். 2006-இல் இஸ்ரேலுடனான மோதலில் நாங்கள் வென்றது போல், இம்முறையும் வெற்றி பெறுவோம்” என்றார்.

அதேவேளையில், “எங்களிடம் உள்ள அனைத்து திறன்களையும் நாங்கள் பயன்படுத்துவோம். லெபனானில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம்” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மறைமுகமாக தங்களது வீரர்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதனால் போர் பதற்றம் இன்னும் அதிகரித்துள்ளது.

லெபனானில் 1,000-ஐ கடந்த உயிரிழப்பு: கடந்த ஓராண்டாகவே இஸ்ரேல் - லெபனான் இடையே மோதல் நிலவி வந்தாலும், கடந்த திங்கள்கிழமை முதல் தீவிரத் தாக்குதல் நடந்து வருகிறது. அதிலும் முதன்முறையாக இன்று (திங்கள்கிழமை) காலை பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதியான கோலாவில் குடியிருப்புகள் நிரம்பிய இடத்தில் இஸ்ரெல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் இறந்தனர். இவர்களில் மூன்று பேர் பாலஸ்தீன விடுதலை பாப்புலர் முன்னணி (PPLF) என்ற ஆயுதக் குழுவின் முக்கியத் தலைவர்கள் என அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது. லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்து வருகிறது.

லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம் ஆண்டில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே 34 நாட்கள் போர் நடைபெற்றது. அப்போது ஐ.நா. சபை தலையிட்டதால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தொடங்கி ஒரு வாரமாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 87 குழந்தைகள், 156 பெண்கள் உள்பட 1030 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உள்பட 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்