இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க. அவர் பதவியேற்றுக் கொண்டதை அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்தது.

முன்னதாக, நேற்று வெளியான அதிபர் தேர்தல் முடிவுகளில் சுமார் 42.31 சதவீத வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றார். “தேர்தலில் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை பெறுகின்ற வகையில் நான் பணியாற்றுவேன். எனக்கு முன் உள்ள சவால் மற்றும் சிக்கல் என்ன என்பதை அறிந்து, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவேன்” என பதவியேற்றுக் கொண்டதும் அவர் தெரிவித்தார்.

அநுரா குமார திசாநாயக்கவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளதோடு ‘இரு நாடுகளின் நலனுக்காக இணைந்து பணியாற்றலாம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

யார் இந்த அநுர குமார திசாநாயக்க? - இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968-ல் கூலி தொழிலாளியின் மகனாக அநுர குமார திசாநாயக்க பிறந்தார். தனது பள்ளி படிப்பினை தம்புத்தேகவில் உள்ள கமினி மகா வித்யாலயா பள்ளியிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

1988-ம் வருடம் இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)யில் இணைந்தார். 1995-ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 2000-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். 2004-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார்.

2014ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)யின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார். மேலும் இலங்கையில் 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE