8 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்லாந்தில் தென்பட்ட துருவக் கரடி - சுட்டுக் கொன்ற போலீஸ்

By செய்திப்பிரிவு

ரெய்க்யவிக்: ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தீவு தேசமான ஐஸ்லாந்து நாட்டில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட துருவக் கரடியை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். உள்ளூர் மக்களுக்கு அச்சுறுத்தல் அளித்த காரணத்தால் இந்த நடவடிக்கை என விளக்கம் தரப்பட்டுள்ளது.

கடந்த 19-ம் தேதி ஐஸ்லாந்தின் வடமேற்கு பகுதியில் போலீஸார் துருவக் கரடியை சுட்டுக் கொண்டுள்ளனர். சுற்றுச்சூழல் முகமை அதிகாரிகளுடன் கலந்து பேசிய பிறகு போலீஸார் இதனை செய்துள்ளனர். அந்த பகுதியில் வசித்த மக்களுக்கு துருவக் கரடி அச்சுறுத்தல் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

“பொதுவாக நாங்கள் இப்படி செய்வதில்லை. அதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை. அந்த பகுதியில் தனியாக இருந்த வயதான பெண்மணி ஒருவரை துருவக் கரடி அச்சுறுத்தி உள்ளது. அதையடுத்து அவர் வீட்டின் மேல் பகுதிக்குச் சென்று பூட்டிக் கொண்டுள்ளார். பின்னர் போன் மூலம் விவரத்தை தன் மகளிடம் தெரிவித்துள்ளார். உதவியும் நாடியுள்ளார். அதன் பிறகு இப்படி செய்ய வேண்டி இருந்தது” என காவல் துறை அதிகாரி ஹெல்கி ஜென்சன் தெரிவித்துள்ளார்.

துருவக் கரடிகள் ஐஸ்லாந்தில் அதிகம் தென்படுவதில்லை. கிரீன்லாந்தில் இருந்து பனி பாறைகள் அடித்து வரப்படும் போது துருவக் கரடிகளும் வருவதுண்டு. 2016-க்கு பிறகு ஐஸ்லாந்தில் முதல் முறையாக இப்போது தான் துருவக் கரடி தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுட்டு கொல்லப்பட்ட துருவக் கரடி சுமார் 150 முதல் 200 கிலோ வரை எடை கொண்டிருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆய்வுக்காக அதன் உடல் ஐஸ்லாந்திய இயற்கை வரலாற்று நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அதன் தோல் மற்றும் எலும்புகள் சேகரித்து வைக்கப்பட உள்ளது.

துருவக் கரடி: துருவக் கரடிகள் பெரும்பான்மையான நேரத்தை ஆர்க்டிக் கடலில் மிதக்கும் பனிப்பாறைகளிலேயே கழிக்கின்றன. ஏனென்றால் இவை உணவுக்குக் கடலில் வாழும் உயிரினங்களையே நம்பியிருக்கின்றன.

குளிரைத் தாங்கும் விதத்தில் துருவக் கரடிகளுக்குத் தடிமனான ரோமங்கள் உடல் முழுவதும் இருக்கின்றன. இவை பார்க்கும்போது வெள்ளையாகத் தெரிந்தாலும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. ஒளி ஊடுருவக்கூடிய நிறமற்ற ரோமங்களாக உள்ளன. ஒளி ரோமங்களில் பிரதிபலிப்பதால் வெள்ளையாகக் காட்சியளிக்கின்றன.

காலநிலை மாற்றம் துருவக்கரடிகள் உயிர் வாழ்வதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. புவி வெப்பமயமாதலால் உலகில் உள்ள கடல் பனி அதிக அளவில் உருகி வருகிறது. இதனால் துருவக் கரடிகள் அழிந்து வருகின்றன. இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தி துருவக் கரடிகளைப் பாதுகாப்பதற்கும் ஆண்டுதோறும் பிப்.27-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச துருவக் கரடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஐஸ்லாந்தில் துருவக் கரடிகள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக உள்ளன. இருப்பினும் மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நேரங்களில் அதிகாரிகள் இந்த மாதிரியான நடவடிக்கைகளை கையில் எடுக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்