கொழும்பு: இலங்கையில் ஒன்பதாவது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப் பதிவு இன்று (செப்.21) அமைதியாக நடைபெற்றது. இதையடுத்து, மாலை 6 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட 70% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
9-வது அதிபர் தேர்தல்: இலங்கையில் அதிபர் ஆட்சி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். அதிபர் அரசின் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும் பதவியில் இருப்பார். இலங்கையில் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற எட்டாவது அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக போட்டியிட்ட மகேந்திர ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று அதிபரானார்.
2022-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அந்நாட்டு மக்கள் நடத்தினர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார். ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், அந்நாட்டின் ஒன்பதாவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் துவங்கி மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது.
38 பேர் களத்தில்... - இந்தத் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சுயேச்சையாகவும், எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பாகவும், தேசிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பாக அநுர குமார திசாநாயக்கவும் களத்தில் உள்ளனர். மேலும், மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகவும், தமிழ் பொது கூட்டமைப்பு சார்பாக அரியநேந்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் உள்ளனர்.
» “ஒரு தமிழன் பிரதமர் ஆக நாட்டை தயார்படுத்த வேண்டும்” - மநீம பொதுக்குழுவில் கமல்ஹாசன் பேச்சு
» IND vs BAN | தடுமாறும் வங்கதேசம்: 3-வது நாளில் வலுவான நிலையில் இந்தியா!
1.71 கோடி வாக்காளர்கள்: இந்த தேர்தலில் 1 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதற்காக நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் 13,421 வாக்குச் சாவடிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் பணிகளுக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் அரசு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு பணிகளை 63,000 போலீஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.
2 அடி நீளத்தில் வாக்குச்சீட்டு: இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே அதிகளவில் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தல் இதுவாகும். 40 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 39 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. அதில் சுயேச்சை வேட்பாளர் ஏ.முகமது இலியாஸ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி மரணமடைந்தார். வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இந்த அதிபர் தேர்தலில் அதிக எண்ணிகையில் வேட்பாளர்கள் போட்டியிட்டதால் இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே மிகவும் நீளமான 2 அடி நீளத்தில் வாக்குச்சீட்டு இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.1,000 கோடி செலவு: இலங்கை வரலாற்றிலேயே அதிக செலவைக் கொண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் இதுவாகும். இதற்காக இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.1,000 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.276 கோடி) செலவிடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு முடிந்ததும் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாலை 6 மணியளவில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் முடிவு எப்போது? - இன்று இரவுக்குள் தேர்தல் முடிவுகளை வெளியிட முயற்சிப்பதாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் இம்முறை வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதல் நேரம் தேவைப்படுவதால் முழுமையான முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
2 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago