இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு நிலவரம் என்ன? - ஒரு ரவுண்டப்

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பின்பு அதன் முதல் அதிபர் தேர்தலை சந்தித்துள்ள நிலையில், பிற்பகல் வரை 30 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களின் அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக மக்கள் வாக்களித்து வருகின்றனர். பதிவான வாக்குகள் இன்று மாலை முதல் எண்ணப்பட இருக்கின்றன. மாலை 4 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. தொடர்ந்து, 6 மணிக்கு அனைத்து வாக்குகளையும் எண்ணும் பணி தொடங்க இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தேர்தல் விதிமீறல் தொடர்பாக 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையம் கூறும்போது, “இலங்கை அதிபர் தேர்தலில் அமைதியான முறையில் நடந்து வருகிறது. விதிமீறல் தொடர்பாக 85 புகார்கள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தல் பாரபட்சமின்றியும், வெளிப்படைத் தன்மையுடன் நடந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு புகார்களையும் கவனத்துடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் கொழும்பு நகர இணை தேர்தல் ஆணையர் கூறும்போது, "மாலை நான்கு மணிக்கு தபால் ஒட்டுக்கள் எண்ணத் தொடங்குவோம். மாலை 6 மணிக்கு இன்று பதிவான வாக்குகள் எண்ணத்தொடங்குவோம். கொழும்பு நகரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தேர்தல் தொடங்கிய மூன்று மணிநேரத்தில் 27 சதவீதம் வாக்குகள் பதிவாகி விட்டன" என்று தெரிவித்தார்.

எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்: இதனிடையே, இலங்கையின் எதிர்காலத்துக்கு ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியமானது என்று இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனுமான நமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இலங்கை அதிபர் 2024 தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்த அவர், மக்களும் தங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தான் வாக்களித்துவிட்ட புகைப்படத்தை பகிர்ந்து அவர் எழுதியுள்ள பதிவில், "நாங்கள் வாக்களித்து விட்டோம். இப்போது உங்கள் முறை - வீட்டிலிருந்து கிளம்பிச்சென்று உங்களுடைய குரலை ஒலிக்கச் செய்யுங்கள். ஒவ்வொரு வாக்கும் இலங்கையின் எதிர்காலத்துக்கு முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

பெண் அதிபர் வேட்பாளர் இல்லை: இலங்கையில் ஆண் வாக்களர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்றாலும் இந்த அதிபர் தேர்தலில் ஒரு பெண்வாக்காளர்கள் கூட இல்லை. சுமார் 22 லட்சம் பேர் வசிக்கும் தீவு நாட்டில் இந்த அதிபர் தேர்தலில், 17 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் என்றாலும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் 38 பேரில் பெண் வேட்பாளர்கள் இல்லை.

மும்முனைப் போட்டி: இலங்கையில் இதுவரை நடந்த அதிபர் தேர்தல்களில் பிரதான கட்சிகளுக்குள் இரண்டு முனைப் போட்டி நடக்கும். அதில், ஒரு கட்சி வெற்றி பெறும். இதனிடையே தீவுநாட்டில் முதல்முறையாக இந்த அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச, தேசிய மக்கள் சக்திதலைவர் அநுர குமார திசாநாயக்க இடையே கடும் போட்டி நிலவுகிறது ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தாலும், சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய மக்கள்சக்தி முன்னணி சார்பில் போட்டியிடுகிறார்.

மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேந்திரன், தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில், சில தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழர்களுக்கான பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இலங்கையின் புதிய அதிபர் யார் என்று நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும். அதிபர் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 61,000 போலீஸார், 9,000 சிவில் பாது­காப்பு படை­யினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE