லெபனான் பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

By செய்திப்பிரிவு

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அடுத்த நாளே அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறின. இந்த ‘டிவைஸ் வெடிப்புத் தாக்குதல்’ சம்பவங்களில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்; ஏறத்தாழ 3,000 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சதிச் செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் மொசாட் உளவுத் துறை சார்பில் இருந்து இதுவரை எந்தவித விளக்கமும் வழங்கப்படவில்லை. அதேவேளையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோயாவ் காலண்ட் “யுத்தத்தில் ஒரு புதிய கட்டம்” என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

நடந்தது எப்படி? - பேஜரில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பினர் வெடிக்கும் போர்ட் என்ற சாதனத்தை பொருத்தியுள்ளனர். அதில், 3 கிராம் அளவுக்கு வெடிமருந்தை நிரப்பியுள்ளனர். பேஜர்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலேயே இந்த வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது. பேஜரில் கடவுச்சொல் (பாஸ்வேர்ட் அல்லது கோட்) வந்தவுடன் வெடிக்கும் வகையிலான சாதனமாகும் இது. 5,000 பேஜர்களில் இந்த சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணிக்கு குறிப்பிட்ட கடவுச்சொல் பேஜரின் திரையில் வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக சூடான பேஜர்கள் அடுத்த சில வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளன. இதே முறைதான் வாக்கி-டாக்கி வெடிப்புச் சம்பவங்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான பேஜர்கள் எந்தவிதமான மாடல்கள் என்பதை லெபனான் ராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர். இவை ஏபி924 வகையைச் சேர்ந்தவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

செல்போனுக்கு பதிலாக பேஜர் ஏன்? - ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் அமைப்பின் தகவல் பரிமாற்ற சாதனங்கள் பற்றிய விவரத்தை இஸ்ரேல் நன்கு அறிந்து வைத்துள்ளது. இதனால்தான் ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர்களை மட்டுமே பயன்படுத்தி தகவல்களை பரிமாறி வந்தனர். இந்த வகை பேஜர்கள் செய்திகளைப் பெறுவதற்கு மட்டுமே பயன்படும். செல்போன்கள் மூலம் தகவல்களைப் பரிமாறினால் இஸ்ரேல் எளிதில் உளவு பார்த்து தகவல்களை இடைமறி்த்துப் பெறலாம் என்பதால் ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அவர்களது வழியிலேயே சென்று அவர்கள் பயன்படுத்திய பேஜர்களிலேயே வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்துள்ளனர். பொதுவாக, ஜேம்ஸ்பாண்ட் வகை படங்களில்தான் இதுபோன்ற சதிச் செயல்கள் அரங்கேறும். ஆனால், லெபனானில் நடந்த இந்தச் சம்பவம் ஜேம்ஸ்பாண்ட் வகை படங்களையும் மிஞ்சுவதாக அமைந்துள்ளது. இந்நிகழ்வு லெபனான் மட்டுமின்றி உலக நாடுகளையே அதிரச் செய்துள்ளது.

இஸ்ரேல் - லெபனான் மோதல் ஏன்? - சுதந்திரப் போரின் தொடக்கத்தில் (1948), இஸ்ரேலுக்கு லெபனான் ஒரு பிரச்சினையை உருவாக்கியது. இந்தப் போரில் லெபனான் ராணுவம் அரபுப் படைகளுக்கு ஆதரவளித்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஓ) உருவாக்கப்பட்டு லெபனானில் போராளிகளை பணியில் அமர்த்தியதும் பிரச்சினை மேலும் தீவிரமானது. தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு இன்னொரு அச்சுறுத்தலாக 1982-ல் ஈரானின் புரட்சிகரக் காவலர்களால் ஹிஸ்புல்லா படை லெபனான் மண்ணில் நிறுவப்பட்டது. கடந்த 2000-ஆம் ஆண்டு தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற இந்தப் படை வழிவகுத்தது.

ஹிஸ்புல்லாக்களின் கொரில்லா தாக்குதல்கள் உலகமே கண்டு அஞ்சிய தாக்குதல் உத்தியாக பிரபலமானது. அப்போது தொடங்கி இஸ்ரேலுக்கு பெரும் சவாலாகவே இந்த ஹிஸ்புல்லாக்கள் இருக்கின்றனர். “பாலஸ்தீனிய நிலங்களை ஆக்கிரமித்து இஸ்ரேல் தன்னை ஒரு நாடாக நிறுவிக்கொண்டது. அது ஒரு சட்டவிரோத நாடு. இஸ்ரேல் இல்லாத அரபு பிராந்தியம் வேண்டும்” என ஹிஸ்புல்லா விரும்புகிறது. இதனால் அவ்வப்போது இஸ்ரேல் - ஹிஸ்புல்லாக்களுக்கு இடையே மோதல்கள், தாக்குதல்கள் நடப்பது தொடர்கதையாகவே இருக்கிறது.

இஸ்ரேல் நீண்ட காலமாக ஹிஸ்புல்லாவை அதன் எல்லைகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது. நாளுக்கு நாள் அது வளர்ந்து பயங்கர ஆயுதக் குழுவாக உருவாகி வருவது இஸ்ரேலுக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. மேலும், சிரியாவில் அது வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதை இஸ்ரேல் தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், ஈரானின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு மூலம் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில்தான் இந்தப் புது ரகமான தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது பாக்கெட்டுகளில் இருந்த கையடக்க பேஜர்கள் ஒரே நேரத்தில் திடீரென வெடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. நகரின் முக்கிய சாலைகள், மார்க்கெட்டுகள், மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் வெடித்தன. இதனால் தலைநகர் பெய்ரூட்டில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE