இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானம்: இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் புறக்கணிப்பு 

By செய்திப்பிரிவு

புது டெல்லி: பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் ஓராண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர கோரும் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் புறக்கணித்தன. இருப்பினும் 124 வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேறியது.

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. மேலும் கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் இந்த தாக்குதல் தொடர்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்திய போதிலும், இஸ்ரேல் தாக்குதலை கைவிடவில்லை. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்காணித்து வரும் ஐ.நாவின் சிறப்பு அமர்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில், சட்டவிரோதமான பாலஸ்தீன ஆக்கிரமிப்பை ஓராண்டுக்குள் இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 124 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, அர்ஜென்டினா உள்ளிட்ட 14 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, நேபாளம், ஸ்வீடன், இங்கிலாந்து உள்ளிட்ட 43 நாடுகள் வாக்களிக்காமல் தீர்மானத்தை புறக்கணித்தன. மேலும் இந்த தீர்மானத்தில், பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE