வெள்ளத்தில் மிதக்கும் மத்திய ஐரோப்பியா: தத்தளிக்கும் கிராமங்கள், தவிக்கும் மக்கள்!

By செய்திப்பிரிவு

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால், ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா முழுவதும் பரவலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பெருக்கு இது எனக் கூறப்படுகிறது. ருமேனியா, செக் குடியரசு, போலந்து மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதோடு அந்நாட்டு அதிகாரிகள் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட தொடங்கியுள்ளனர். பல இடங்களில் பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

ஆஸ்திரியாவிலிருந்து ருமேனியா வரை ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். செக் எல்லையில் உள்ள போலந்து நகரமான க்ளோட்ஸ்கோவின் மேயர் மைக்கல் பிஸ்கோ, “அங்கு நீரின் அளவு குறைந்துவிட்டது. இருப்பினும் எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. வார இறுதி வரை குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது நகரின் பாதிக்கும் மேல் மின்சாரம் இல்லை” என்றார்.

ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், தீவிர வானிலை மற்றும் ஹங்கேரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தனது அனைத்து சர்வதேச பணிகளையும் ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளார். செக் குடியரசில் அதிக மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி வழங்குவதற்காக ஆயுதப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் தெரிவித்தார்.

கிழக்கு ருமேனியாவில் சில கிராமங்களும், நகரங்களும் நீரில் மூழ்கின. இந்த வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ருமேனியாவில் இருக்கும் அதிகாரி ஒருவர், “நீங்கள் இந்த இடத்தில் இருந்தால் உடனடியாக அழுதுவிடுவீர்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்கள் உடுத்தியிருந்த உடை மட்டுமே தற்போது மீதமிருக்கிறது” என்றார்.

போலந்து அரசு அவசர கால பேரிடர் நிலையை அறிவித்துள்ளது. போலந்தில் நைசா நகரில் உள்ள மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் உள்ள வீதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

நான்கு மாகாணங்களில் சுமார் 420 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக போலந்து கல்வி அமைச்சர் பார்பரா நோவாக்கா தெரிவித்தார். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், வெள்ளத்துக்கு பிறகு உதவ 100 அவசர கால பணியாளர்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களை அனுப்ப உக்ரைன் முன்வந்துள்ளது என்றார். மேலும், அந்நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க், பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளின் பிரதமர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் நிதியுதவி கேட்பதாகவும் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE