உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் அளித்த பேட்டியிலும், ‘‘ ரஷ்யா-உ க்ரைன் இடையேயான பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் முக்கிய பங்காற்ற முடியும் என நம்புகிறோம்’’ என கூறினார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும், ‘‘ ரஷ்யா-உக்ரைன் பிரச்சினைக்கு இந்தியா மற்றும் சீனா தீர்வு காண முடியும்’’ என்றார். இதையடுத்து அதிபர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி, அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அனுப்பி வைப்பதாக கூறினார்.

இந்நிலையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா (பிரிக்ஸ்) நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சென்றிருந்தார். இந்த கூட்டத்துக்கு இடையே ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் செர்கே சோய்குவை, அஜித் தோவல் சந்தித்து பேசினார். இருதரப்பு பரஸ்பர நலன்கள் குறித்து பேசிய இருவரும், உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தும் பேசினர். இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம், பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டதாக ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்பின் ரஷ்ய அதிபர் புதினை, அஜித் தோவல் சந்தித்து உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து பேசினார். பிரிக்ஸ் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயையும், அஜித் தோவல் சந்தித்து பேசினார். அப்போது இந்தியா- சீனா உறவு,இரு நாடுகளுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த உலகுக்கும் முக்கியமானது என்பதை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE