வியட்நாமில் யாகி புயலுக்கு 200 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஹானோய்: வியட்நாமில் யாகி புயலுக்கு சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 125-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

வடக்கு வியட்நாமை யாகி புயல் கடந்த சனிக்கிழமை தாக்கியது. அப்போது கனமழை பெய்ததுடன், மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதில் வீடுகளின் கூரைகள், மரங்கள், பாலங்கள் பெயர்ந்து விழுந்தன. பல கட்டிடங்கள், தொழிற்சாலைகள் சேதம் அடைந்தன. புயலின் வேகம்மறுநாள் தணிந்தாலும் கனமழை தொடர்ந்ததால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

இந்நிலையில், "இந்தப் பேரிடரில் இதுவரை 197 பேர் உயிரிழந்தனர், 128 பேரை காணவில்லை, 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்" என்று வியட்நாமின் வி.என். எக்ஸ்பிரஸ் நாளேடுதெரிவிக்கிறது. வடக்கு வியட்நாமில் தொடர்ந்து பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். சாலைகள், மின்சாரம் துண்டிப்பு, குடிநீர், உணவுப் பொருள்தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இப்புயல், வெள்ளத்தில் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 15 லட்சம் கோழிகள் மற்றும் வாத்துகள் இறந்துள்ளன. மேலும் 2,500 பன்றிகள், எருமைகள் மற்றும் பசுக்கள் உயிரிழந்தன" என்று தெரிவித்தனர். கடந்த 30 ஆண்டுகளில் வடக்குவியட்நாமை தாக்கிய மிகமோசமான புயலாக யாகி கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE