அமெரிக்காவில் 9/11 தீவிரவாத தாக்குதல் நினைவு தினம்: ஜோ பைடன், கமலா ஹாரிஸ், ட்ரம்ப் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 9/11 தீவிரவாத தாக்குதலின் 23-வது நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்காய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரம் என்று அழைக்கப்பட்ட உலக வர்த்தக மையத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தனர். இதில் 3,000 பேர் வரை உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலின் 23-வது நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டுள்ள கிரவுண்ட் ஜீரோ நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் அரசியல் வேற்றுமைகளை கடந்து பங்கேற்றனர்.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தலின் போட்டியாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் ஆகியோர் முதல் தேர்தல் விவாதத்தில் கலந்து கொண்ட சில மணி நேரங்களில் இந்த நிகழ்வில் ஒன்றாக பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனிடையே, உலக வர்த்தக மையம் கடந்த 2001 செப்டம்பர் 11-ல் தாக்கப்பட்ட போதுவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. தீவிரவாதிகளின் அந்த தாக்குதலை நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் கல்பர்ட்சன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேரில் பார்த்ததுடன் அதனை புகைப்படமும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE