வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. தற்போது ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபராக உள்ள ஜோ பைடன் வயது மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து, ஜனநாயக் கட்சி சார்பில் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சிசார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இரண்டு வேட்பாளர்களும் நேரடியாக சந்தித்து விவாதம்நடத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில்நடந்த இந்த விவாத நிகழ்ச்சியை ‘ஏபிசி’ செய்தி நிறுவனம் நடத்தியது.இந்நிகழ்ச்சி பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது. நிகழ்ச்சி மேடைக்கு வந்த கமலாஹாரிஸ், டொனால்டு ட்ரம்ப்புடன் கைக்குலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் வேட்பாளர்கள் இருவரும் நேரில் சந்தித்து கைக்குலுக்கியது இதுவே முதல் முறை.
நிகழ்ச்சி தொடங்கியதுமே அதிபர்ஜோ பைடன் நிர்வாகத்தின் தோல்விகளைப் பட்டியலிட்டு ட்ரம்ப் பரபரப்பைகூட்டினார். அதற்கு கமலா ஹாரிஸ்தகுந்த பதில்களை அளித்தார். அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டம், பொருளாதார சரிவு,வேலைவாய்ப்பின்மை, வீட்டு வசதியின்மை எல்லாம் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் அதிகரித்ததாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினார். அதற்கு ட்ரம்ப் பதில் அளிக்கையில், தன்னுடைய ஆட்சிக் காலத்தில்தான் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாகவும், ஐரோப்பிய நாடுகளுடன் நேரடியாக பேச முடிந்ததாகவும் கூறினார்.
‘‘ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தால் கோடீஸ்வரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வரிகளை ரத்து செய்துவிடுவார். ஆனால், கஷ்டத்தில் இருக்கும் அல்லது நடுத்தர குடும்பங்களுக்கு வரிகளை அதிகமாக்கி விடுவார்.நடுத்தர குடும்பங்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை அமல்படுத்த விரும்புகிறேன். நடுத்தர மக்களுக்குகுறைந்த விலையில் வீட்டு வசதி ஏற்படுத்தி தருவேன். ட்ரம்ப் விட்டுச் சென்ற பொருளாதார சரிவை, அதிபர்ஜோ பைடன்தான் சரி செய்துள்ளார்.உலகளவில் முதல் முறையாக கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது ட்ரம்ப் ஒன்றும் செய்யவில்லை’’ என்று வாக்காளர்களைக் கவரும் வகையில் கமலா ஹாரிஸ் பேசினார்.
விவாதம் சூடுபிடிக்க தொடங்கியதும் கமலா ஹாரிஸை குறி வைத்து நேரடியாக பேசத் தொடங்கினார் ட்ரம்ப். ‘‘கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட். அவருடைய தந்தை மார்க்சிஸ்ட். கரோனா பெருந்தொற்று காலத்தில் நான் மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை’’ என்று குற்றம் சாட்டினார். அதை கேட்டு கமலா ஹாரிஸ் புன்னகைத்தபடி இருந்தார்.
தொடர்ந்து கமலா பேசுகையில், ‘‘ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தால், கருக்கலைப்புக்கு தடை கொண்டு வருவார்’’ என்று தெரிவித்தார். அதை உடனடியாக மறுத்த ட்ரம்ப், ‘‘கமலா ஹாரிஸ் பொய் சொல்கிறார்’’ என்றார். பின்னர் மீண்டும் சட்டவிரோத குடியேறிகள் பற்றி ட்ரம்ப் குற்றம் சாட்டினார். சட்டவிரோத குடியேறிகள் மக்களின் செல்லப் பிராணிகளை அடித்துத் தின்கின்றனர். இதை தடுக்க பைடன் நிர்வாகம் ஒன்றும் செய்யவில்லை’’ என்றார். இந்தக் குற்றச்சாட்டை கேட்டும்கமலா ஹாரிஸ் சிரித்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், கடந்த ஜூலை 13-ம் தேதி நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் தன்னை கொல்ல முயற்சி நடந்தது என்று தெரிவித்தார். ‘‘அமெரிக்காவுக்கு நான் அச்சுறுத்தல் என்கின்றனர். ஜனநாயகத்தைப் பற்றி ஜனநாயகக் கட்சியினர் பேசுகின்றனர். ஆனால், ஜனநாயகத்துக்கு அவர்கள்தான் அச்சுறுத்தலாக இருக்கின்றனர்’’ என்றார்.
பின்னர் விவாதம் இஸ்ரேல் - பாலஸ்தீன போர், உக்ரைன் - ரஷ்ய போர்பக்கம் திரும்பியது. கமலா ஹாரிஸ் பேசும்போது, ‘‘நான் உலகம் முழுவதும் துணை அதிபராக சென்று வந்தேன். அங்கெல்லாம் டொனால்டு ட்ரம்ப்பை பார்த்து தலைவர்கள் சிரிக்கின்றனர். உங்களை (ட்ரம்ப்) அவமானம் என்கின்றனர்’’ என்றார். அதற்கு ட்ரம்ப் பதில் அளிக்கையில், ‘‘நான் அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் - பாலஸ்தீன போரே நடந்திருக்காது. கமலா ஹாரிஸுக்கு இஸ்ரேலைப் பிடிக்காது. அந்தப் பிராந்தியத்தில் அரேபியர்களின் மக்கள் தொகை கூடுவதும் அவருக்குப் பிடிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளுடன் பேசுவதற்கு பைடனுக்கு துணிவில்லை. நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் போரை முடிவுக்கு வந்திருப்பேன். எனக்கு ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவரும் நல்ல நண்பர்கள். நானே அவர்கள் பிரச்சினையை தீர்த்து வைத்திருப்பேன்’’ என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த கமலா ஹாரிஸ், ‘‘ட்ரம்ப் சொல்வதில் உண்மையில்லை. இஸ்ரேலுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய கமலா, ‘‘ட்ரம்ப் அதிபராக இருந்திருந்தால், ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனின் கீவ் நகரில்அமர்ந்து கொண்டிருப்பார். போலந்தில்இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளைஅபகரிக்க திட்டமிட்டு கொண்டிருப்பார். அவர் உங்களை மதிய உணவாக சாப்பிட்டிருப்பார்’’ என்று கிண்டலடித்தார். மேலும், ‘‘ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற வேண்டும் என்று ட்ரம்ப் நினைக்கிறாரா இல்லையா?’’ என்று கமலா கேள்வி எழுப்பினார். அதற்கு நேரடியாக பதில் அளிக்காத ட்ரம்ப், ‘‘நான் போர்முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்றார். இவ்வாறு இருவருக்கும் இடையே தொடர்ந்து அனல்பறக்க விவாதம் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இருவருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் மூலம் தேர்தலில் யாருக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago