அனல் பறந்த ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதம்: அமெரிக்க பொருளாதாரம் முதல் கருக்கலைப்பு சட்டம் வரை

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் அதி முக்கியமான டொனால்ட் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்கப் பொருளாதார நிலவரம் முதல் கருக்கலைப்புச் சட்டம் வரை அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இதுவரையிலான கருத்துக் கணிப்புகள் பலவும் கமலா ஹாரிஸுக்கு சற்றே வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருப்பதாக சுட்டிக் காட்டும் சூழலில் இந்த விவாதத்துக்குப் பின்னர் அதன் போக்கு எப்படி மாறுகிறது என்பது தெரிய வரும். அதனால் டொனால்ட் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதத்தை அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஏபிசி ஊடகம் ஏற்று நடத்துகிறது. நேரடி ஒளிபரப்பு ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி+ மற்றும் ஹுலு ஆகியவற்றில் ஒளிபரப்பப்படுகிறது.

‘ஆட்டிப் படைக்கும் வேலைவாய்ப்பின்மை’ ... விவாதத்தைத் தொடங்கிய ஜ்னநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், ட்ரம்ப் ஆட்சியின் கீழ் தான் அமெக்கா மிகப் பெரிய வேலைவாய்ப்பின்மை சிக்கலை எதிர்கொண்டது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் மந்தநிலை காலத்துக்குப் பின்னர் மோசமான வேலைவாய்ப்பின்மை சிக்கல் ட்ரம்ப் ஆட்சியில் தான் நிகழ்ந்தது. ஆனால் நான் அதிபரானால் அந்த நிலை மாற்றப்படும். அமெரிக்காவில், வாய்ப்புகளைத் தரும் பொருளாதாரத்தை கட்டமைக்க விரும்புகிறேன். அமெரிக்காவில் வீட்டு வசதியை கையடக்க விலைக்குக் கொண்டு வருவேன். குழந்தை வரிக்கடன் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். ட்ரம்ப் அதிபரானால் அவர் ட்ரம்ப் சேல்ஸ் டேக்ஸ் கொண்டு வருவார். அதாவது அன்றாடம் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 20 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார்.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் ட்ரம்ப் ஏற்படுத்தி வைத்திருந்த பொருளாதார சீரழிவுகளை பைடன் சரிசெய்துள்ளார். ட்ரம்புக்கு உங்களுக்கான திட்டம் என்று எதுவும் இல்லை. அவர் எப்போதும் அவரை தற்காத்துக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுவார் என்றார்.

இதனை மறுத்த ட்ரம்ப், தனது ஆட்சிக் காலத்தில் தான் அமெரிக்கப் பொருளாதாரம் மிக செழிப்பாக இருந்தது என்றார்.

கருக்கலைப்பு உரிமைகள்: கருக்கலைப்பு உரிமைகள் பற்றி பேசுகையில், “ட்ரம்ப் அதிபரானால் தேசம் தழுவிய கருக்கலைப்பு தடை அமலுக்கு வரும். பாலியல் வன்கொடுமைகள், நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு இடையேயான தகாத பாலுறவு மூலம் உருவாகும் கருவினை கலைப்பது கூட ட்ரம்ப் ஆட்சி அமைந்தால் கடினமாகிவிடும். அதனால் ட்ரம்ப்பை ஆதரிக்கக்கூடாது.” என்றார். அப்போது ட்ரம்ப், “சில மாகாணங்களில் குழந்தைகள் பிறந்தபின்னர் கொல்லப்படுகின்றனர். ஜனநாயகக் கட்சி 9வது மாதத்தில் கூட கருக்கலைப்பை அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறது.” என்றார். அப்போது குறுக்கிட்ட நெறியாளர் அமெரிக்காவில் குழந்தைகள் பிறந்தபின்னர் கொலை செய்யப்படுவதை எந்த மாகாண சட்டமும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தார். “கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள்” என்று கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோத குடியேற்ற விவகாரம்: சட்டவிரோத குடியேற்றம் அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பதாகக் கூறிய ட்ரம்ப், அவ்வாறு குடியேறுபவர்கள் ஓஹியோ நகரவாசிகளின் செல்லப் பிராணிகளை வதைத்து உணவாக்கிக் கொள்வதாகக் கூறினார். அதற்கு நெறியாளர் குறுக்கிட்டு “அப்படியான செய்திகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் போர்: ரஷ்யா - உக்ரைன் போர் 31வது மாதமாக நீடித்துவரும் நிலையில் அது குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ், “எங்களுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. நல்லவேளை இந்த போர் மூண்ட தருணத்தில் நீங்கள் (ட்ரம்ப்) அதிபராக இருக்கவில்லை. இல்லாவிட்டால் இந்நேரம் புதின் கீவ் நகரில் அமர்ந்து கொண்டு ஐரோப்பிய நாடுகளை எப்படித் தாக்குவது என்று திட்டம் தீட்டிக் கொண்டு இந்திருப்பார். புதின் ஒரு சர்வாதிகாரி. அவர் உங்களை மதிய உணவாக புசித்துவிடுக்கூடும்” என்று எச்சரித்தார்.

அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “கமலா ஹாரிஸ் தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துணை அதிபர். உக்ரைன் - ரஷ்யப் போரை அவர் தடுக்கத் தவறிவிட்டார்” என்றார்.

இஸ்ரேல் - காசா போர்: “இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்துவிட்டனர். நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் மூண்டிருக்காது. கமலா ஹாரிஸுக்கு இஸ்ரேல் மீது கடும் வெறுப்பு உண்டு. அவர் அமெரிக்க அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகிவிடும்” என்றார்.

“ட்ரம்பின் இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். அவர் பிரச்சினையை திசைதிருப்பி, பிரித்தாள முயற்சிக்கிறார். அவருக்கு எப்போதுமே சர்வாதிகாரிகள் மீது அபிமானம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தன்னையே ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவே விரும்புகிறார்” என்று பதிலடி கொடுத்தார்.

இவ்வாறாக ட்ரம்ப் - ஹாரிஸ் நேரடி விவாதம் களை கட்டியது. இந்த விவாதத்துக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்