கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர் கப்பல்கள் முகாம்: இலங்கை கடற்படையுடன் தனித்தனியாக கூட்டுப் பயிற்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் வந்து தங்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - சீனா இடையே தற்போது உறவு சுமூகமாக இல்லை. நில எல்லை பகுதியில் சீன ராணுவம் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே நேரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை துறைமுகங்களுக்கு சீன போர்க் கப்பல்கள், உளவு கப்பல்கள் அடிக்கடி வந்து செல்கின்றன. இதற்கு இலங்கை அரசிடம், இந்தியா ஏற்கெனவே தனது அதிருப்தியை தெரிவித்தது. ஆனாலும், சீன போர்க்கப்பல்கள், இலங்கை துறைமுகம் வர அந்நாட்டு அரசு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது.

இந்நிலையில், கொழும்பு துறைமுகத்துக்கு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பல் கடந்த திங்கள் கிழமை காலை சென்றது. அந்த கப்பலுக்கு இலங்கை கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சீன கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் ஹெஃபே, வுசிஷான், கிலன்சான் ஆகியவையும் சுமார் 1,500 கடற்படை வீரர்களுடன் கொழும்பு துறைகத்துக்கு வந்தன. அவற்றுக்கும் இலங்கை கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமுக உறவு இல்லாத இருநாட்டு போர்க்கப்பல்களும் ஒரே துறைமுகத்தில் வந்து தங்கியதால் அங்கு சலசலப்பான சூழல் நிலவியது. இந்தியா, சீன கடற்படை கப்பல்களுடன் இலங்கை கடற்படை நாளை தனித்தனியாக கூட்டுப் பயிற்சியும் மேற்கொள்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா அதிக நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மாலத்தீவு சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்ததால், அங்கிருந்த ராணுவத்தை இந்தியா திரும்ப பெறும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இலங்கை துறைமுகத்துக்கும் சீன கப்பல்களின் வருகை அதிகரித்து வருகிறது. இலங்கை வந்துள்ள 3 சீன போர்க்கப்பல்களையும் இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த கப்பல்களின் நடமாட்டம் முன்பு எப்போதும் இல்லாத அளவில் நீடித்துள்ளது.

இந்திய கடற்படையில் 140 போர்க்கப்பல்கள் உள்ளன. ஆனால், சீனா 360 போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களுடன் உலகின் மிகப் பெரிய கடற்படையாக உருவெடுத்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE