கரோனா தகவல்களை சென்சார் செய்ய வெள்ளை மாளிகை அதிகாரிகள் அழுத்தம்: மார்க் ஸூகர்பெர்க்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: மெட்டா நிறுவன சமூக வலைதளங்களில் கரோனா தொடர்பான கன்டென்ட் அடங்கிய பதிவுகளை சென்சார் செய்ய சொல்லி பைடன் - ஹாரிஸ் நிர்வாகம் தங்கள் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததாக மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் தெரிவித்துள்ளார். இதனை குடியரசுக் கட்சியின் நீதிக் குழுவிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளது என்ன என்பதை பார்ப்போம். “மெட்டா போன்ற நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு எப்படி செயல்படுகிறது என்பது குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது. இதில் எங்கள் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நான் தெளிவாக விவரிக்க விரும்புகிறேன்.

எங்கள் சமூக வலைத்தளங்கள் எல்லோருக்குமானது. நாங்கள் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கிறோம். அதே நேரத்தில் பயனர்களை பாதுகாப்பான வகையில் எங்கள் தளத்தில் கனெக்ட் செய்கிறோம். இது தொடர்பாக உலகம் முழுவதும் உள்ளது அரசு மற்றும் பலரிடமிருந்து கருத்தினை பெற்று வருகிறோம்.

கடந்த 2021-ல் வெள்ளை மாளிகை அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டனர். கரோனா தொடர்பான சில பதிவுகளை சென்சார் செய்யுமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதில் விமர்சிக்கும் வகையிலான பதிவுகளும் அடங்கும். அதை நாங்கள் செய்ய மறுத்த போது அதிபர் பைடனின் நிர்வாகம் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அதன் காரணமாக நாங்கள் கரோனா கன்டென்ட் உட்பட சிலவற்றில் மாற்றங்களை செய்தோம். அதேபோல 2020 அதிபர் தேர்தலின் போது பைடன் மீதான குற்றாச்சாட்டு குறித்த பதிவை நாங்கள் நீக்கியது தவறான முடிவு. அது ரஷ்ய தரப்பில் வெளியான தவறான தகவலாக இருக்கலாம் என சொல்லப்பட்டது. அந்த நிலையில் அதை நீக்கி இருந்தோம். பின்னர் தான் அது சரியான தகவல் என்பது தெரியவந்தது” என தெரிவித்தார்.

அவரது கடிதத்தை குடியரசுக் கட்சியின் நீதிக் குழு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதோடு அந்த கடிதத்தின் முக்கிய அம்சங்களை ஹைலைட் செய்துள்ளது. கருத்து சுதந்திரம், மெட்டாவுக்கு பைடன் - ஹாரிஸ் நிர்வாகம் கொடுத்த அழுத்தம் போன்றவை இதில் அடங்கும். இதை அடிப்படையாக கொண்டு எக்ஸ் தள உரிமையாளர் ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE