உக்ரைனில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

By செய்திப்பிரிவு

கீவ்: உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி நேற்று முன்தினம் கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அந்நாட்டு அதிபருடன் இணைந்து அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க பயணமாக நேற்று முன்தினம் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்குச் சென்றார். போலந்து நாட்டிலிருந்து ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்த மோடி, அங்குள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

ஜெலன்ஸ்கியுடன் கைகுலுக்கிய மோடி அவரை ஆரத்தழுவினார். பிறகு இரு தலைவர்களும் அங்கிருந்த மல்டிமீடியா காட்சிக் கூடத்துக்கு சென்றனர். அங்கு ரஷ்யாவுடனான போரில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டது தொடர்பான காட்சிகளை மோடி பார்வையிட்டார். பிறகு இரு தலைவர்களும் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்துக்கு சென்றனர். ஏராளமான பொம்மைகள் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் பிரதமர்மோடி கூப்பிய கரங்களுடன் அமைதியாக பிரார்த்தனை செய்தார்.பிறகு சிறிய பொம்மையை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், “தேசிய அருங்காட்சியகத்தில் அதன் வரலாறு குறித்தும் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீதான ஏவுகணை தாக்குதல்உட்பட உக்ரைனில் குழந்தைகள் இருக்கும் இடங்களில் நடைபெற்ற ரஷ்யாவின் தாக்குதல்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பயணத்துக்கு பிறகு பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “அதிபர் ஜெலன்ஸ்கியும் நானும் கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினோம். மோதல்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றன. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களை நினைத்து மிகுந்த வேதனை அடைந்தேன். துயரை தாங்கும் வலிமை அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்தேன்” என்று கூறியுள்ளார்.

இந்தியா - உக்ரைன் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் கீவ் நகரில் உள்ள மரின்ஸ்கி அரண்மைனையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்தியாவுக்கு வருமாறு ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இதனை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார். இந்தியா போன்ற ஒரு சிறந்த நாட்டுக்கு செல்வது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். என்றாலும் இப்பயணம் உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து அமையும் என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி திரும்பினார். தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE