கீவ்: ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அது அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கியை அவரது மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும் பின்னர் இரு நாடுகளின் தூதுக் குழுக்களுடனும் உரையாடினர். அப்போது பேசிய நரேந்திர மோடி, "பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே மோதலுக்கு தீர்வு காண முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.
உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதன்மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும். அமைதிக்கான முயற்சிகளில் முனைப்பான பங்களிப்புகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. இந்த மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கம் முதலே அது ஒரு பக்கம் இருக்கிறது. அது அமைதியின் பக்கம். இந்த மோதலில் முதல் உயிரிழப்பு ஒரு குழந்தை என்பது மனதை வேதனைப்படுத்துகிறது" என தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உக்ரைனுக்கு எனது வருகை வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியா - உக்ரைன் நட்புறவை ஆழப்படுத்தும் நோக்கத்தில் நான் இந்த மாபெரும் தேசத்திற்கு வந்தேன். அதிபர் ஜெலன்ஸ்கி உடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்தினேன். அமைதி எப்போதும் நிலவ வேண்டும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது. உக்ரைன் அரசுக்கும், மக்களுக்கும் அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
» உக்ரைன் போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி
» கமலா ஹாரிஸுக்காக பிரச்சாரக் களத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்துக்கள் தீவிரம்
இந்த சந்திப்பின்போது இந்தியா - உக்ரைன் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் ஜெலன்ஸ்கி உடன் மிகவும் பயனுள்ள விவாதங்களை நடத்தினேன். உக்ரைனுடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. விவசாயம், தொழில்நுட்பம், மருந்து மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளை நாங்கள் விவாதித்தோம். கலாச்சார இணைப்புகளை மேலும் உறுதிப்படுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். மோதல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினோம். அமைதி காக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது. அமைதியான முறையில் மோதலுக்கு தீர்வு காண்பதே மனிதகுலத்துக்குச் சிறந்தது" என பதிவிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, உக்ரைன் அதிபரிடம் 4 BHISHM Cubes (நடமாடும் மருத்துவமனைகள்) ஒப்படைக்கப்பட்டன. அனைத்து மருத்துவ சூழ்நிலைகளுக்கும் ஏற்ற முதல் வரிசை பராமரிப்புக்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட BHISHM க்யூப்ஸ் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை. உக்ரைனில் காயமடைந்தவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க இவை உதவும். உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியை வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமரின் பேச்சுவார்த்தை குறித்து கீவ்-ல் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "மிகவும் விரிவான, மிகவும் திறந்த மற்றும் மிகவும் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற்றது. அமைதி உச்சி மாநாட்டில் இந்தியா தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என உக்ரைன் தரப்பு விரும்புகிறது. பிரதமர் மோடிக்கும் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான பெரும்பாலான நேரங்கள் மோதல் குறித்தானதாகத்தான் இருந்தன.
இந்தியா இதுவரை 17 மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. 10 ஜெனரேட்டர் செட்களுடன் 22 டன் மருத்துவ ஆதரவு உபகரணங்கள் உள்ளடக்கிய BHISHM க்யூப்களை இன்று நாங்கள் ஒப்படைத்தோம். இந்தியப் பிரதமருக்கும் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதாக இருந்தது. வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, மருந்து, விவசாயம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
உக்ரைன் உடன் 1992-ல் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்ட பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வருவது இதுவே முதல்முறை. இந்தச் சந்திப்பின்போது, உக்ரைன் அதிபர் இந்தியாவுக்கு வருகை தர பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அவரது வசதிக்கேற்ப ஜெலென்ஸ்கி இந்தியா வருவார் என எதிர்பார்க்கிறோம்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்தும் பிரதமர் மோடி அதிபர் ஜெலன்ஸ்கியிடம் எடுத்துரைத்தார். சந்தை சூழ்நிலை என்ன என்பதும், இந்தியா என்ன செய்தது என்பதும் விளக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விற்கும் பல நாடுகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தை மிகவும் இறுக்கமாக உள்ளது. இப்படி ஒரு நிர்ப்பந்தம் ஏன் உள்ளது? ஒட்டுமொத்த சர்வதேசப் பொருளாதாரத்தின் நலனுக்காக ஏன் விலைகள் நியாயமானதாகவும் நிலையானதாகவும் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது” என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago