“அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது” - சிகாகோ மாநாட்டில் கமலா ஹாரிஸ் பேச்சு

By செய்திப்பிரிவு

சிகாகோ: சிகாகோ நகரத்தில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் இறுதி நாளில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்று கூறினார். வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கமலா ஹாரிஸ். இதுவரையிலான கருத்துக் கணிப்புகள் பலவும் கமலா ஹாரிஸுக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு சற்றே அதிகமாகவே இருப்பதாகக் கூறுகின்றன.

இந்நிலையில், சிகாகோ நகரத்தில் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி தொடங்கிய நடைபெற்று வரும் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் கடைசி நாளில் கமலா ஹாரிஸின் உரை கவனம் பெற்றுள்ளது. 3 நாட்கள் மாநாட்டில் கடைசி நாளான நேற்று (ஆக.22) பேசிய கமலா ஹாரிஸ் “அமெரிக்க அதிபர் தேர்தல் பணிகளைக் கையிலெடுக்கும் தருணம் வந்துவிட்டது” என்று மக்களிடம் ஆதரவு கூறினார். அவர் மேடையில் பேசும்போது ஆதரவாளர்கள் ‘கமலா, கமலா’ என்றும் ‘யுஎஸ்ஏ (U.S.A)’ என்றும் முழங்கிக் கொண்டே இருந்தனர்.

நிகழ்வில் கமலா ஹாரிஸ் பேசியதாவது: ஒவ்வொரு அமெரிக்கரின் சார்பாகவும், கட்சி, இனம், பாலினம், மொழி என அனைத்து எல்லைகளையும் கடந்து நான் இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை முறைப்படி ஏற்றுக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தலின் மூலம் இத்தேசத்துக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. அது, கடந்த கால கசப்புகளை, சந்தேகங்களை, பிரிவினைகளை புறந்தள்ளுவதற்கான வாய்ப்பு. ஒரு புதிய பாதையை நோக்கி முன்னேறக்கூடிய வாய்ப்பு. ஒரு கட்சியாக, குழுவாக அல்ல ஒட்டுமொத்த தேசமாக புதிய பாதையில் முன்னேறும் வாய்ப்பு நம்முன் உள்ளது.

இந்தத் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது. டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது தனது எல்லைகளற்ற அதிகாரத்தை தனது சொந்த நலனுக்காக மட்டுமே பயன்படுத்தினார். ஆனால், ஜோவின் (ஜோ பைடனின்) பண்பு உத்வேகம் அளிக்கக்கூடியது. அமெரிக்காவுக்கு உங்களின் (பைடன்) பங்களிப்பை வரலாறு கூறும். உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்த எனது தந்தை டொனால்ட் ஜேஸ்பர் ஹாரிஸ் ஒரு துணிச்சல்காரர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எனது தாய் ஷ்யாமளா கோபாலன், தைரியமானவர். கடினமானவரும் கூட. என் தாய் எனக்கும் எனது சகோதரி மாயாவுக்கும், அநீதியைக் கண்டு புகார் கூறாமல் அதன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவின் ஒற்றுமைக்காக, அமெரிக்காவின் எதிர்காலத்துக்காகப் போராடுவேன். இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE