“வங்கதேச வன்முறை வெறியாட்டங்கள் குறித்து விசாரணை தேவை” - மவுனம் கலைத்த ஷேக் ஹசீனா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டச் சம்பவங்களே நடைபெற்றுள்ளன. வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கொலைகளை செய்தவர்களையும் கண்டுபிடித்து உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்” என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் கடந்த மாதமும், இம்மாதமும் நடத்திய போராட்டங்கள் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களாக மாறியது. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், காவல்துறையினர், அப்பாவி பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் இந்தியாவில் தற்போது ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது ரகசியமாகவே உள்ளது.

இந்நிலையில், அவருடைய மகன் சஜீப் வாசத்தின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கம் வாயிலாக ஷேக் ஹசீனா 3 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை வங்க மொழியில் உள்ளது. இந்தியாவில் தஞ்சம் புகுந்த பின்னர் வங்கதேச கலவரம் பற்றி ஷேக் ஹசீனா முதன்முறையாக அந்த அறிக்கையின் வாயிலாக மவுனம் கலைத்துள்ளார். இது வங்கதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அந்த அறிக்கையின் சாராம்சம் வருமாறு: வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டச் சம்பவங்களே நடைபெற்றுள்ளன. வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கொலைகளை செய்தவர்களையும் கண்டுபிடித்து உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும்.

வன்முறையாளர்கள் வங்கதேச விடுதலைக்காக ரத்தம் சிந்திய எனது தந்தை ‘பங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மானையும், ஆயிரக் கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவமதித்துள்ளனர். எனவே, ஆகஸ்ட் 15 ஆம் தேதியை வங்கதேச மக்கள் துக்க தினமாகக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன். பங்கபந்து பவனில் திரண்டு வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கோருகிறேன்.

மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், கலாச்சார பணியாளர்கள், சாமான்ய மக்கள் எனப் பலரும் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை உரித்தாக்குகிறேன். என்னைப் போன்றே அவர்களும் அன்புக்குரியவர்களை இழந்து வாடுகிறார்கள். இந்தப் படுகொலைகளில், பேரழிவை ஏற்படுத்திய வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

போராட்டக்காரர்கள் எனது வசிப்பிடத்தையும் தீக்கிரையாக்கியுள்ளனர். எனது நினைவுகளும் கூட சாம்பலாகிவிட்டது. நமக்கு விடுதலையும், அங்கீகாரமும், சுய மரியாதையும் பெற்றுத் தந்த தலைவர் முஜிபுர் ரஹ்மானுக்கு அவமரியாதை செய்துவிட்டனர். இதற்காக நாட்டு மக்களிடம் நான் நீதி கோருகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, “வங்கதேசத்துக்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவை தங்களிடம் ஒப்படைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. அந்த தீவை அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தால், ஆட்சியில் நீடித்திருப்பேன். ஆனால், வங்கதேசத்தின் நலனுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தேன். தற்போது அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்துள்ளேன்.” என்று ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால், “இது நகைப்புக்கு உரிய விஷயமாக இருக்கிறது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய நாங்கள் காரணம் என்பது முற்றிலும் தவறானது” என்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE