இந்திய எல்லைகளில் குவியும் வங்கதேச இந்துக்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.இதில் 560 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனாகடந்த 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். தற்போது, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

மாணவர்கள் போராட்டம் ஓய்ந்தாலும் வங்கதேசம் முழுவதும் இந்துக்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 17,000 இந்து குடும்பங்கள் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர்.

இந்திய எல்லைப் பகுதிகள்: இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையை பகிர்ந்துள்ளன. மேற்குவங்கம், திரிபுரா,அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன. இந்த5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் குவிந்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வட்டாரங்கள் கூறியதாவது: மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி, வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இங்கு 50 மீட்டர் தொலைவு இடைவெளியில் பிஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை சுமார் 500-க்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினோம்.

மேகாலயா மாநிலம் வங்கதேசத்துடன் 443 கி.மீ. தொலைவை பகிர்ந்துள்ளது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் தடுப்பு வேலி இல்லை. வழக்கமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள் நாள்தோறும் மேகாலயாவுக்கு வந்துவிட்டு திரும்பி செல்வது வழக்கம். தற்போது வங்கதேச மக்களின் வருகை முழுமையாக தடுக்கப்பட்டு உள்ளது.

மிசோரம் மாநிலம் வங்கதேசத்துடன் 273 கி.மீ. தொலைவை பகிர்ந்துள்ளது. இது மலைப்பகுதி என்பதால் ஊடுருவலை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்தியாவின் திரிபுரா மாநிலம், வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளில் 8 சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகள் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வங்கதேச மக்கள் இந்தியாவுக்குள் நுழைவது வழக்கம். தற்போது வங்கதேச மக்களின் வருகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

அசாமில் இருந்து வங்கதேசத்துக்கு பாரக் நதியின் வழியாக நாள்தோறும் மாடுகள் கடத்தப்படுவது வழக்கம். தற்போது பிஎஸ்எப் வீரர்களின் பலத்த பாதுகாப்பு காரணமாக மாடுகள் கடத்தல் முற்றிலுமாக தடுக்கப்பட்டு உள்ளது.

அசாதாரண சூழல் காரணமாக மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் குவிந்து வருகின்றனர். அவர்களிடம் நிலைமையை எடுத்துக் கூறி திருப்பி அனுப்பி வருகிறோம். இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

திரிபுராவை சேர்ந்த விஎச்பி மூத்த தலைவர் சவுரவ் காந்தி தாஸ் கூறியதாவது: வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக பிஎஸ்எப் படையின் கிழக்கு பிராந்திய கூடுதல் இயக்குநர் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும்.

வங்கதேசத்தில் 32 சதவீதமாக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை தற்போது 8 சதவீதமாக குறைந்திருக்கிறது. தற்போது வங்கதேச இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு சவுரவ் காந்தி தாஸ் தெரிவித்தார்.

சனாதன உரிமைகள் கூட்டமைப்பின் மூத்த தலைவர் சந்தன் சக்கரவர்த்தி கூறியதாவது: திரிபுரா, மேற்குவங்கம், மேகாலயா, அசாம் மாநிலங்களில் மருத்துவ சிகிச்சைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வங்கதேச மக்கள் வருகின்றனர். சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு அந்த நாடு இந்தியாவை முழுமையாக சார்ந்திருக்கிறது. இவற்றை முன்னிறுத்தி இந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வங்கதேசத்துக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வங்கதேச இடைக்கால அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வங்கதேச மக்கள் இந்தியா வருவதை நாங்கள் தடுப்போம். வங்கதேச பொருட்களை முழுமையாக புறக்கணிப்போம். இவ்வாறு சந்தன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

மீண்டும் ரத்தம் சிந்துவோம் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்: வங்கதேச இந்துக்கள் உறுதி - பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. ஆனால், வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட கனு குமார் என்பவர் கூறும்போது, “இந்துக்கள், இந்துக் கோயில்களை குறிவைத்து சிலர் தாக்கி வருகின்றனர். இங்கு வசிக்கும் இந்துக்கள், அவர்களது உடைமைகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்" என்றார்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிடும்போது, “இந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் இந்த நாடு சொந்தம். இந்த நாடு ஒரு மதத்தினருக்கு மட்டும் சொந்தமானதல்ல. நாடு உருவாக ரத்தத்தைக் கொடுத்தோம். அவசியம் ஏற்பட்டால் மீண்டும் ரத்தத்தைக் கொடுத்து போராடத் தயாராக இருக்கிறோம். ஆனால் நாட்டை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம்" என்று தெரிவித்தனர். மேலும் வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவர் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தனி அமைச்சகம் அமைக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுமட்டுமல்லாமல், சிறுபான்மையின மக்களுக்காக, வங்கதேச நாடாளுமன்றத்தில் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

தாக்குதலை கண்டித்து டாக்கா தெருக்களில் இந்துக்கள் போராட்டம்: வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள், கோயில்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்துக்களின் கோயில்களுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

இதனால் பெரும்பாலான இந்துக்கள் அங்கிருந்து தப்பி மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று டாக்கா நகர தெருக்களில் இந்துக் கள் இறங்கிப் போராட்டம், ஊர்வலம் நடத்தினர். இந்துக்கள். கோயில்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்துக்கள் காக்கப்பட வேண்டும் என்றும், நாங்களும் பெங்காலிதான் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் அவர்கள் கண்டன ஊர்வலம் போராட்டத்தின் போது, 'ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா' என்ற நாமத்தையும் உச்சரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்