“வன்முறை, குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பீர்” - வங்கதேச மக்களுக்கு முகமது யூனுஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

டாக்கா: குழப்பம், வன்முறையில் இருந்து வங்கதேசத்தை காப்பாற்றுமாறு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள முகமது யூனுஸ் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் டாக்கா வந்த முகமது யூனுஸ், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், நாட்டில் எங்கும் தாக்குதல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே நமது முதல் பொறுப்பு. நாட்டை குழப்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். வன்முறையில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். இதன்மூலம் மட்டுமே மாணவர்கள் காட்டிய பாதையில் நாம் முன்னேற முடியும்.

வங்கதேசம் ஓர் அழகான நாடு. இது அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால், அது அழிந்துவிட்டது. இப்போது நாம் உழுது நிலத்தை தயார் செய்ய வேண்டும். நாம் மீண்டும் எழ வேண்டும். இளைஞர்கள் உழுது நிலத்தை தயார் செய்வார்கள். நாங்கள் அதைப் பார்ப்போம். அவர்களின் வழிகாட்டுதலின்படி முன்னேறுவோம். இளைஞர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பாராட்டுக்குரியது. இது வங்கதேசத்தின் இரண்டாவது வெற்றி நாள். இந்த சுதந்திரத்தின் பலன்கள் வங்கதேசத்தின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும். அது நிகழாவிட்டால் இந்த இரண்டாவது வெற்றி அர்த்தமற்றதாகிவிடும்.

காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர் இயக்கத்தின் முதல் மாணவர் அபு சயீதுக்கு எனது அஞ்சலி. எனக்கு அபு சயீத் ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு இதயத்திலும் அவரது உருவம் பதிந்துள்ளது. காவல் துறையின் துப்பாக்கிகளுக்கு முன் அவர் நின்று காட்டிய தைரியம் மகத்தானது. அதன் பிறகு யாருக்கும் அச்சம் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராசிரியரான முகமது யூனுஸ், டாக்காவில் இறங்கிய உடன் இடு ஒதுக்கீட்டு எதிர்ப்பு பிரச்சாரத்தின் மாணவர் தலைவர்களுடனும், இடைக்கால அரசை அமைக்கக்கூடிய சிலருடனும், சிவில் சமூகத்தின் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE