டாக்கா: நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை (வியாழன்) பதவியேற்கும் என்று வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்) செய்தியாளர்களைச் சந்தித்த வாக்கர்-உஸ்-ஜமான், "இடைக்கால அரசு நாளை இரவு 8.00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளது. இடைக்கால அரசின் ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருக்கலாம். நாடு முழுவதும் நிலைமை கணிசமாக மேம்பட்டு வருவதால், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இயல்பு நிலை திரும்பும். கடந்த சில நாட்களாக குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தப்ப விடமாட்டோம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விமானப் படை மற்றும் கடற்படைத் தளபதி என்னோடு இருக்கிறார்கள். நாங்கள் ஒன்றாகச் செயல்படுகிறோம்" என தெரிவித்தார்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த 5-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உடனடியாக ராணுவ விமானம் மூலம் டாக்காவில் இருந்து புதுடெல்லிக்கு தப்பி வந்தார். தற்போது அவர் டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறியதை அடுத்து அந்நாட்டின் ராணுவத் தளபதி நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்பதாக அறிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராணுவத் தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், "ராணுவம் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும். யாருக்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டதோ அவர்கள் அனைவருக்கும் நீதி வழங்கப்படும்" என்றும் குறிப்பிட்டார்.
» “வங்கதேசத்தை புதிதாக கட்டமைக்க வேண்டும்” - விடுதலைக்குப் பின் கலிதா ஜியா உரை
» வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா ‘தப்பியது’ முதல் ‘புகலிடம்’ வரை - மகன் சொல்வது என்ன?
இதையடுத்து, இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ராணுவத் தளபதி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும், வேறு யாரை நியமித்தாலும் அதனை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.
தற்போது ஐரோப்பிய நாடு ஒன்றில் இருக்கும் முகம்மது யூனுஸ் நாளை (ஆக.8) நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாடு திரும்பியதும் இடைக்கால அரசு அவரது தலைமையில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, முகம்மது யூனுஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “நமது புதிய வெற்றியை சிறந்த முறையில் பயன்படுத்துவோம். நமது தவறுகளால் இதனை நழுவ விடக்கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும். வன்முறையை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
யார் இந்த முகம்மது யூனுஸ்? - ஏழை மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு வருபவரும், அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவருமான முகம்மது யூனுஸ் (Muhammad Yunus) வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே பத்துவா என்ற கிராமத்தில் (1940) பிறந்தார். டாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் 1969-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
அமெரிக்காவின் மிடில் டென்னஸி மாநிலப் பல்கலைக்கழகம், சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பின்தங்கிய கிராமத்துக்கு 1974-ல் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றார். சிறுதொழில் செய்யும் பெண்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதையும், அதுவே சுமையாகி அவர்களை வறுமையில் தள்ளுவதையும் கண்டார். சொந்தப் பணத்தில் இருந்து அவர்களுக்கு கொஞ்சம் கடன் கொடுத்தார். அது அவர்கள் லாபம் சம்பாதிக்க உதவியதுடன், ஓரளவு வாழ்க்கை நடத்தவும் உதவியது. கடன் வாங்கியவர்கள் நேர்மையுடன் திருப்பியும் செலுத்தினர். தொடர்ந்து ஏழை மக்களுக்கு குறுங்கடன் (Micro Loan) வழங்கி வந்தார். கிராமீன் வங்கியை 1983-ல் தொடங்கினார். இதன்மூலம் கடன் பெறுபவர்களில் 97% பேர் பெண்கள். தரப்பட்ட கடனில் 97% தொகை முறைப்படி திருப்பியும் செலுத்தப்பட்டன. உலக அளவில் வங்கித் துறையில் இது மகத்தான சாதனை.
ஏழைகள் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டதற்காக முகம்மது யூனுஸுக்கும், இவரது கிராமீன் வங்கிக்கும் சேர்த்து அமைதிக்கான நோபல் பரிசு 2006-ல் வழங்கப்பட்டது. இதில் கிடைத்த தொகையை ஏழைகள் ஊட்டச்சத்து திட்டத்துக்கும், கண் மருத்துவமனை அமைக்கவும் வழங்கினார். வங்கதேச அதிபர் விருது, ரமன் மகசேசே விருது, மனிதாபிமானச் சேவைப் பதக்கம், உலக உணவுப் பரிசு, சிட்னி அமைதிப் பரிசு, காந்தி அமைதிப் பரிசு, அன்னை தெரசா விருது என 50-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். முகம்மது யூனுஸின் குறுங்கடன் திட்டம் உலக அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. வறுமை ஒழிப்புக்கு சிறந்த வழியை உருவாக்கியவர் என்று யூனுஸை உலக பொருளாதார நிபுணர்கள் பாராட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
45 mins ago
உலகம்
6 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago